மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால், உலகளவில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையேற்றம் மற்றும் வணிக ரீதியான எரிவாயு தட்டுப்பாட்டால் தங்கும் விடுதிகள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நெருக்கடியைச் சமாளிக்க, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை பெருமளவில் அதிகரிக்க இந்தியா அதிரடி முடிவை எடுத்துள்ளது. அமெரிக்காவுடன் ஏற்கனவே வர்த்தக ஒப்பந்தம் செய்திருந்தாலும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது.
ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு முதல்முறையாக, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு வாங்குவது குறித்து ரஷ்யாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் தனது மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 40 சதவீதத்தை ரஷ்யாவிடமிருந்தே இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.
ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு தடைகளை விதித்துள்ள நிலையில், இந்தியாவின் இந்த முடிவு அமெரிக்காவிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
