இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இரு தரப்பிற்கும் இடையே நீண்டகாலமாகப் போர் நடைபெற்று வந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், தற்போது பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்ட மசோதா இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதாவிற்கு ஆதரவாக 62 வாக்குகளும், எதிராக 47 வாக்குகளும் கிடைத்தன. இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு மந்திரி இதமர் பென் குவிர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த புதிய சட்டத்தின்படி, இஸ்ரேல் குடிமக்களைக் கொலை செய்யும் பயங்கரவாதிகளுக்குக் கட்டாயம் மரண தண்டனை விதிக்கப்படும். இந்தத் தண்டனை 90 நாட்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதும், மிக அரிதான சூழலில் மட்டுமே நீதிபதிகள் ஆயுள் தண்டனை வழங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத்தைத் தேர்ந்தெடுப்பவர்கள் மரணத்தைத் தேடிக்கொள்கிறார்கள் என்று மந்திரி குவிர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் வரலாற்றில் மரண தண்டனை என்பது மிக அரிய ஒன்றாக இருந்த நிலையில், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்தச் சட்டம் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
