மீண்டும் ஹார்முஸ் நீரிணையை மூடிய ஈரான்! காரணம் என்ன?

Estimated read time 1 min read

தெஹ்ரான்: அமெரிக்க கடற்படை ஈரானிய துறைமுகங்களை தொடர்ந்து முற்றுகையிட்டு வருவதால், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது.

ஈரான் ராணுவத்தின் மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்கா தனது வாக்குறுதியை மீறி, ஈரானிய துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களுக்கு எதிராக தொடர்ந்து தடை விதித்து வருகிறது.

எனவே, அமெரிக்கா தனது முற்றுகை நடவடிக்கையை முழுமையாக கைவிடும் வரை ஹார்முஸ் நீரிணை மீண்டும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். நீரிணையின் நிலைமை கடுமையான கண்காணிப்பிலும், ராணுவத்தின் கட்டுப்பாட்டிலும் இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் முன்பு, லெபனானில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணையை திறப்பதாக அறிவித்திருந்தது. ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் முழுமையான ஒப்பந்தம் ஏற்படும் வரை தடை நடவடிக்கை தொடரும் என்று கூறியதை அடுத்து, ஈரான் தனது முடிவை மாற்றியுள்ளது.

ஹார்முஸ் நீரிணை உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை எடுத்துச் செல்லும் மிக முக்கியமான கடல் பாதை. இந்த நீரிணை கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்ததால், உலக அளவில் கச்சா எண்ணெய் விலை பெரும் உயர்வை சந்தித்தது. பல நாடுகளின் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது.

இதேவேளையில், ஈரான் தனது வான்வழிப் பாதையின் கிழக்குப் பகுதியை சர்வதேச விமானங்களுக்கு ஓரளவு திறந்துள்ளது. ஈரான் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “நாட்டின் கிழக்குப் பகுதி வான்வழிப் பாதைகள் சர்வதேச விமானங்களுக்கு திறக்கப்பட்டுள்ளன. சில விமான நிலையங்களும் காலை 7 மணி முதல் செயல்படத் தொடங்கியுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதலால் தொடங்கிய ஈரான் போர், இதுவரை ஈரானில் குறைந்தது 3,000 பேரையும், லெபனானில் 2,290 பேரையும், இஸ்ரேலில் 23 பேரையும், வளைகுடா அரபு நாடுகளில் டஜன் கணக்கானோரையும் பலி கொண்டுள்ளது. அமெரிக்க இராணுவத்தினர் 13 பேரும் உயிரிழந்துள்ளனர்.

ஹார்முஸ் நீரிணை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், உலக அளவில் எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது.

இது உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.ஈரான் ராணுவத்தின் இந்த அறிவிப்பு, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author