உலக அரசியலில் மெகா திருப்பம்: பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் திடீர் பயணம்

Estimated read time 1 min read

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான நீண்டகாலப் பகைமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது.

இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேரில் பங்கேற்கக்கூடும் என்ற தகவல் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைக்காக, துருக்கி நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தனது பயணத்தைப் பாதியிலேயே ரத்து செய்துவிட்டு அவசரமாக நாடு திரும்புகிறார்.

அமெரிக்காவின் ‘Axios’ செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் அதிபர் ட்ரம்ப் கூறுகையில், “ஈரானுடன் இன்னும் ஓரிரு நாட்களில் ஒரு சுமுகமான உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கிறேன்.

இறுதி ஒப்பந்தத்திற்கான மேடை இஸ்லாமாபாத்தில் அமையும் பட்சத்தில், நானும் அங்கு நேரில் செல்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது டெஹ்ரான் முதல் வாஷிங்டன் வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேச்சுவார்த்தையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் தனது வாஷிங்டன் பயணத்தை ரத்து செய்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் நடைபெறும் இந்த உயர்மட்டக் கூட்டத்தின் பாதுகாப்பு மற்றும் வியூகங்களை அவர் நேரடியாகக் கண்காணிக்க உள்ளார். தன்னுடைய கடுமையான நிலைப்பாட்டில் இருந்து ஈரான் தற்போது சற்று இறங்கி வந்துள்ளது.

வர்த்தகக் கப்பல்களின் போக்குவரத்திற்காக மிக முக்கியமான ‘ஹார்முஸ்’ நீரிணையை மீண்டும் திறந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஈரானின் இந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை அதிபர் ட்ரம்ப் வரவேற்றுள்ளார். இருப்பினும், இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடரும் என வாஷிங்டன் தெளிவுபடுத்தியுள்ளது.

பேச்சுவார்த்தையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 19 (ஞாயிறு) அல்லது 20 (திங்கள்) ஆகிய தேதிகளில் நடைபெற வாய்ப்புள்ளது. முன்னதாக நடைபெற்ற முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்றத் தலைவர் முகமது பாகர் காலிபாப் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆனால், அணுசக்தி விவகாரங்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான மோதல்களால் அதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரை நூற்றாண்டு காலப் பகைமைக்கு இந்தப் பேச்சுவார்த்தை முற்றுப்புள்ளி வைக்குமா அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் மேலும் அதிகரிக்குமா என்பதை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author