கடந்த 2024ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது, ஏப்., 6ல் தாம்பரம் வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ய, சென்னையில் இருந்து நெல்லைக்கு, 3 கோடி, 98 லட்சத்து, 91,500 ரூபாய் கொண்டு செல்ல இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்து, பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணம், நெல்லை லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் சார்பில், தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த விவகாரத்தில், நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய, அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என, திமுக – எம்பி கிரிராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் சிறப்பு பிளீடர் என்.ரமேஷ் ஆஜராகி, ”சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யும்படி, அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது.அதிகாரிகள் தான் முடிவெடுக்க முடியும்.
இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த வழக்கை, கடந்தாண்டு இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது,” என்றார். இதைப் பதிவு செய்த நீதிபதிகள், கிரிராஜனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
