விண்வெளி அறிவு அனைவருக்கும் அவசியமானது!

Estimated read time 1 min read
(அக்டோபர் 4 -10) – உலக விண்வெளி வாரம்

உலக விண்வெளி வாரம் என்பது அறிவியல் தொழில்நுட்பத்தின் ஒரு சர்வதேச கொண்டாட்டமாகும், 1999-ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை உலக விண்வெளி வாரத்தை அக்டோபர் 4 முதல் 10 வரை கொண்டாடப்படவேண்டும் என்று அறிவித்தது.

அது முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 முதல் 10 வரை விண்வெளி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், விண்வெளிப்பற்றி முக்கிய தகவல்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
ஸ்புட்னிக் 1 செயற்கைக்கோள்.

அக்டோபர் 4, 1957 சோவியத் யூனியன் முதன்முதலில் , ஸ்புட்னிக் 1, என்ற செயற்கைகோளை உருவாக்கி, விண்வெளிக்கு அனுப்பியது. இதையும் விஞ்ஞானிகள் இந்நாளில் நினைவு கூறுகின்றனர். சரி…
உலக விண்வெளி வாரம் எங்கு, எப்படி கொண்டாடப்படுகிறது?

உலக விண்வெளி வாரம் என்பது விண்வெளி ஏஜென்சிகள், விண்வெளி நிறுவனங்கள், பள்ளிகள், கோளரங்கங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள வானியல் கிளப்புகளால் இந்த காலகட்டத்தில் நடத்தப்படும் ஒரு நிகழ்வு.
உலக விண்வெளி வாரத்தின் இலக்குகள் என்ன?

கல்வியில் மாணவர்களுக்கு விண்வெளி அறிவை அதிகப்படுத்தவும், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் மற்றும் கணிதம் பற்றிய அறிவை வளர்க்கவும், விண்வெளி நன்மைகள் பற்றி மக்கள் தெரிந்து கொள்ளவும், இந்த விண்வெளி வாரமானது கொண்டாடப்படுகிறது.

உலக விண்வெளி வாரத்திற்கான 2025-ம் ஆண்டிற்கான் கருப்பொருள் ‘விண்வெளியில் வாழ்வது’ என்பதாகும்.

இந்தக் கருப்பொருள் விண்வெளியை நிரந்தர வாழ்விடமாக மாற்றுவதற்கான மனித குலத்தின் பயணத்தைப் பற்றி ஆராய்கிறது.

இடத்தை ஒரு வீடாக மாற்றுவதில் உள்ள தொழில்நுட்பங்கள், புதுமைகள் மற்றும் சவால்களில் கவனம் செலுத்துகிறது.

அவற்றுள் முக்கியமாக, விண்வெளியில் நிரந்தர வாழ்விடங்கள், விண்கலங்கள், சந்திர தளங்கள் மற்றும் செவ்வாய்க் கிரகத்தில் சாத்தியமான குடியிருப்புகள் உட்பட, மனிதர்கள் அவற்றிற்கு எவ்வாறு தகவமைத்துக் கொள்ள முடியும்?

உயிர் ஆதரவு அமைப்புகள், மூடிய-லூப் விவசாயம், கதிர்வீச்சு பாதுகாப்பு மற்றும் விண்வெளியில் உளவியல் நல்வாழ்வை உறுதி செய்தல் போன்ற முக்கிய தொழில்நுட்பங்கள், எதிர்கால சந்ததியினர் விண்வெளியில் வாழ அனுமதிக்கும் உள்கட்டமைப்பை உருவாக்க எதிர்காலம் சார்ந்த கண்டுபிடிப்புகள் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது.
விண்வெளி வீரர்களின் சவால்கள்

முதலாவதாக, விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்களுக்கென்று ஒரு வரம்பு இருக்கிறது. அதற்குள் அவர்கள் வாழப் பழகிக்கொள்கின்றனர். உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால், உணவு இருந்தாலும், தேவைக்கு அதிகமாக அவர்கள் சாப்பிடுவதில்லை.

காரணம் பூமியிலிருந்து செல்லும் விண்கலமானது தாமதம் ஏற்பட்டால், உணவுப் பற்றாக்குறையானது வந்துவிடும் ஆகவே.. விண்வெளி வீரர்கள் அளந்தே உணவுகளை உட்கொள்கின்றனர். ஆனால் பூமியில் தினமும் பல டன் உணவு வீணடிக்கப்படுகிறது.

அடுத்ததாக காற்று, சுத்தமான குடிநீர் இவற்றை உருவாக்குவது, அங்கு அவர்களின் கடமையாக உள்ளது. அதே சமயம் கழிவுகளையும் குறைந்தபட்சமாக குறைப்பது. மறுசுழற்சி செய்வது என்று பல ஈடுபாட்டில் அவர்கள் இருக்கின்றனர்.

ஆனால் பூமியில் நமக்கு தேவையான குடிநீர் காற்றை இயற்கையே கொடுத்திருந்தாலும், அதை மாசுப்படுத்தி வீண் செய்கிறோம்.
அடுத்ததாக மின்சாரம்…

சோலார் பேனல்கள் மூலம் விண்வெளி நிலையத்தில் மின்சாரமானது உற்பத்தி செய்யப்பட்டு அங்கு பயன்படுத்தப்படுகிறது. 1958-ம் ஆண்டிலேயே வான்கார்ட் 1 செயற்கைக்கோள்களுக்கு சோலார் பேனல்கள் மூலம் ஆற்றல் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பூமியில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலமாக மின்சாரமானது தயார் செய்யப்பட்டு, மின் தேவையைப் பூர்த்தி செய்துகொள்கிறோம்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்களால் வளர்க்கப்படும் பயிர்கள்

வெஜிடபிள் புரொடக்ஷன் சிஸ்டம் என்று அழைக்கப்படும் இந்த சோதனையானது விண்வெளி நிலையத்தில் நடத்தப்பட்டது.

2021 ஆம் ஆண்டில் முதன்முதலில் LED விளக்குகளைப் பயன்படுத்தி விண்வெளி நிலையத்தில் கீரை உற்பத்தியை செய்தனர்.

இது நாசா விண்வெளி வீரர் மைக்கேல் ஹாப்கின்ஸ் என்பவரால் அறுவடை செய்யப்பட்டது. இங்கு மண்ணுக்கு ஒவ்வாத பல ரசாயணங்களைப்பயன்படுத்தி இயற்கைக்கு எதிரான விவசாயம் செய்து வருகிறோம்.
நீர் சுழற்சி

தண்ணீரைப் பற்றி பேசுகையில், விண்வெளி நிலையத்தில் தண்ணீரை மறுசுழற்சி செய்வது மிக முக்கியமானது, ஏனெனில் பூமியில் இருந்து விண்வெளிக்கு தண்ணீர் கொண்டு செல்வது அதிக செலவு ஆகும்.

ஆகவே, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள அனைத்து நீரும் நீர் மீட்பு அமைப்பு மூலம் மறுசுழற்சி செய்யப்படுகிறது,

அதாவது மனித உடலில் இருந்து வெளியேறும் வியர்வை மற்றும் சிறுநீரை மறுசுழற்சி செய்து அதை சுத்தமான குடிநீராக மாற்றி அங்கு வீரர்கள் உபயோகித்து வருகின்றனர். ஆனால் பூமியில் தண்ணீரானது வீணடிக்கப்பட்டு கடலில் கலக்கிறது.

ஆகவே… விண்வெளி வீரர்கள் தங்களின் வாழ்க்கையை மிகவும் சிரமத்துடனே விண்வெளி நிலையத்தில் கழித்து வருகின்றனர். இவர்களின் அனுபவம் நமக்கு ஒரு பாடமாக அமையட்டும்.

பூமியை நாம் சுரண்டி இயற்கைக்கு எதிராக செயல்படுவதால், அதன் பருவநிலை மட்டுமின்றி, குடிநீர், உணவு, காற்றுக்கும் கூட படிப்படியாக தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலை இப்படியே சென்றால், இந்த பூமியும் ஒரு நாள் விண்வெளி நிலையமாக மாறக்கூடும் என்பதில் ஐயமில்லை.

– ஜெய ஸ்ரீ

  • நன்றி – புதிய தலைமுறை

#space #InternationalSpaceStation #ISS #விண்வெளிநிலையம் #பிரபஞ்சம் #october4to10 #worldspaceweek #உலகவிண்வெளிவாரம் #அக்டோபர்4to10

Please follow and like us:

You May Also Like

More From Author