
வாழ்க்கை எப்போது, யாரை, எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்பது யாருக்கும் தெரியாது என்பதற்கு மும்பையைச் சேர்ந்த ஸ்வேதா தேசாய் ஒரு சிறந்த உதாரணம். லண்டனில் ஒரு முன்னணி நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்து கொண்டு, ஆண்டுக்கு சுமார் 1 கோடி ரூபாய் (100,000 பவுண்டுகள்) சம்பாதித்து வந்தவர் ஸ்வேதா.
பிராண்டட் உடைகள், டிசைனர் பேக்குகள் என ராணி போல வாழ்ந்த இவர், தனது கணவரின் வேலைக்காக 2023-ல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்குக் குடிபெயர்ந்தார். ஆனால், அங்கு சென்றவருக்குப் பெரிய ஏமாற்றமே காத்திருந்தது; லண்டனில் பார்த்தது போன்ற ஒரு உயர் பதவி அவருக்குக் கிடைக்கவில்லை.
வேலை கிடைக்காமல் ஒரு கட்டத்தில் மன அழுத்தத்திற்கு உள்ளான ஸ்வேதா, தனது ஈகோவைத் தூக்கி எறிந்துவிட்டு மெல்போர்னில் வீடுகளைச் சுத்தம் செய்யும் வேலையில் (Airbnb cleaning) சேர்ந்தார். “கோடி கோடியாகச் சம்பாதித்த கைகள், இன்று வீடுகளைச் சுத்தம் செய்கிறதே” என்று ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும், இந்த அனுபவம் அவருக்கு ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது.
“பணம் என்பது வெறும் காகிதம் அல்ல, அது ஒரு பெண்ணுக்கான சுதந்திரம்; வேலை எதுவாக இருந்தாலும் அது நமக்கான அடையாளத்தைக் கொடுக்கும்” என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது வீடுகளைச் சுத்தம் செய்வதுடன், குழந்தைகளுக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுப்பது மற்றும் சொந்தமாகத் தொழில் தொடங்குவது எனப் பம்பரமாய் சுழன்று வரும் ஸ்வேதாவின் இந்தக் கதை, “முயற்சித்தால் எதையும் சாதிக்கலாம்” என்பதற்குப் பெரிய சான்றாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
