தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு மாணவர்கள் எதிர்பார்த்திருந்த முடிவுகள் தற்போது இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 7.53 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வில் வெற்றி பெற்று மேல் படிப்பிற்கு தகுதி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in .இணையதளம் மட்டுமின்றி, மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள அவர்களது கைபேசி எண்களுக்கு SMS வாயிலாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஆசிரியர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வருகிற 13-ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிற நிலையில் இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி தேர்வு எழுதியவர்களில் 97 சதவீதம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மாணவர்களில் 93.19 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. கிட்டத்தட்ட 98.87% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்ற ஈரோடு முதலிடத்தில் இருக்கும் நிலையில் 98.5% தேர்ச்சியுடன் சிவகங்கை இரண்டாம் இடத்திலும், 97.63 சதவீத தேர்ச்சியுடன் கன்னியாகுமரி மூன்றாம் இடத்திலும், 97.54 சதவீத தேர்ச்சியுடன் நெல்லை நான்காம் இடத்தில் இருக்கிறது.
