சென்னை : தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கழகம் (விசிக) தலைவர் திருமாவளவன் இன்று மாலை முக்கிய முடிவை அறிவிக்கவுள்ளார். எனவே, தமிழக மக்கள் அனைவருடைய பார்வையும் திருமா முடிவை எதிர்நோக்கி தான் காத்துகொண்டு இருக்கிறது.
இந்நிலையில், விசிக துணை பொதுச்செயலாளரும், திண்டிவனம் எம்எல்ஏவுமான வன்னி அரசு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:“விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் துணை முதல்வராக மட்டுமல்லாமல், முதல்வராகக் கூட வாய்ப்பு உள்ளது.” என தெரிவித்தார். ஏற்கனவே, த.வெ.வுக்கு ஆதரவு தெரிவிக்க விசிக தரப்பு திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கவேண்டும் என கேட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், வன்னி அரசு இப்படி தெரிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
மேலும், “தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி வரக்கூடாது என்பதே விசிகவின் நிலைப்பாடு. இந்த விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடு சட்டத்திற்கு புறம்பானது” என்றும் வன்னி அரசு தெரிவித்தார்.ஆட்சியிலும் பங்கும், அதிகாரத்திலும் பங்கு என சமூகவலைதளத்தில் பதிவிட்ட கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “என்ன நிலைப்பாடு என்பதை விசிக தலைவரான திருமா தான் அறிவிப்பார்” என்று பதிலளித்தார்.
தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், காங்கிரஸ் இடதுசாரி கட்சிகளான சிபிஐ, சிபிஎம் ஆகியவை ஏற்கெனவே ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே, 116 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இப்போது விசிகவின் முடிவும் எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக அரசியல் களம் முழுமையான எதிர்பார்ப்பில் உள்ளது.
