அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
2026 சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனை போட்டி ஏற்படும். எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது. ஆனால் வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம். டிசம்பர் 31-ம் தேதிக்குள் கூட்டணி முடிவாகிவிடும் என எதிர்பார்த்தோம்; ஆனால் தள்ளிப்போகிறது; கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க அமமுகவிற்கு பிப்ரவரி மாதம் வரை அவகாசம் உள்ளது.
2026 தேர்தலில் நாங்கள் இடம் பெறும் கூட்டணிதான் வெற்றி பெறும். அமமுகவை தவிர்த்து விட்டு எந்த கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது. யார் துரோகி, யார் அப்பாவி என தமிழக மக்களுக்கு, தொண்டர்களுக்கு தெரியும்.
செங்கோட்டையன் ஒரு மூத்த நிர்வாகி. அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதை தொடர்ந்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு அவர் மன வருந்தியதாகவும் நான் பலமுறை தெரிவித்தேன். பின்னர் செங்கோட்டையன் ஒரு முடிவெடுத்து தவெகவில் இணைந்திருக்கிறார். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
