அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மூன்று நாள் சீனப் பயணம் குறித்து இன்னும் மௌனம் காத்து வருகிறார். ஈரானுடனான போர் பதற்றம் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி மோதலுக்கு நடுவே, அமெரிக்காவுக்கு அதன் நட்பு நாடுகள் ஆதரவைக் கைவிட்ட நிலையில், டிரம்ப் சீனாவின் உதவியை நாடி பெய்ஜிங் சென்றார்.
இந்தச் சூழல் 1972-ல் வியட்நாம் போரிலிருந்து வெளியேற சீனாவை நாடிய முன்னாள் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸனின் நிலையை நினைவூட்டுவதாக அமைந்தது. டிரம்ப், தனது அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் சீன அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசினாலும், ஈரான் விவகாரத்தில் சீனா அமெரிக்காவுக்கு ஆதரவளிக்காமல் ஏமாற்றத்தையே அளித்தது.
மாறாக, பாரசீக வளைகுடாவைப் போர்க்களமாக்க வேண்டாம் என்று கூறி, ஈரான் மீது கடல்வழி முற்றுகை விதித்துள்ள அமெரிக்காவையே சீனா மறைமுகமாகக் குற்றம் சாட்டியது. அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளைத் தகர்த்து, சீனாவும் ஈரானும் தங்களுக்குள் பலமான மூலோபாய நட்புறவை வளர்த்துக் கொண்டதே டிரம்பின் இந்த ஏமாற்றத்திற்குக் காரணமாகும்.
டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் ஈரானின் எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்தபோதே, சீனா அதனை எதிர்க்கத் தொடங்கியது. சமீபத்தில் டிரம்ப் சீனப் பயணத்திற்குப் புறப்படுவதற்குச் சற்று முன்புகூட, ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கிய ஐந்து சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்தது.
ஆனால், இந்த முறை சீனா அசரவில்லை; அமெரிக்காவின் தடைகளால் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும், தங்களிடம் பேரம் பேச அமெரிக்காவிடம் எந்தத் துருப்புச் சீட்டும் இல்லாதபோது எப்படி உதவியை எதிர்பார்க்க முடியும் என்றும் சீனா ஓப்பனாகக் கேள்வி எழுப்பியுள்ளது. இதனால் டிரம்பின் இந்த மூன்று நாள் சீனப் பயணம் அமெரிக்காவிற்கு எந்தப் பலனையும் தராமல் முடிந்துள்ளது.
