“அப்பாவ பத்தி யாரும் தப்பா போடாதீங்க… 20 கோடி கொடுக்காம ஏமாத்திட்டாங்க”- கே.ராஜனின் மகன்

Estimated read time 1 min read

தயாரிப்பாளர்களுக்கு கடனாக கொடுத்த ரூ.20 கோடி திருப்பித்தராததால் தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர். குடும்ப பிரச்சினை காரணமாக கே.ராஜன் தனியாக வசித்து வந்தார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இவர் தனது காரில் ஓட்டுனர் தனசேகருடன் அடையாறு திருவிக மேம்பாலத்திற்கு சென்றதாக தெரிகிறது. காரை ஓரமாக நிறுத்தும் படியும் நடைபயிற்சி சென்று வருவதாகவும் கே.ராஜன் கூறியதாக தெரிகிறது. நடைபயிற்சி சென்ற கே.ராஜன் திடீரென அடையாற்றில் குதித்து விட்டதாக தெரிகிறது. அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் தனசேகர் தீயணைப்பு துறையினருக்கும் அடையாறு போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். மயிலாப்பூர், சைதாப்பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து வந்து பைபர் படகு மூலம் தீவிரமாக அரை மணி நேரம் தேடிய பிறகு கே.ராஜன் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அடையாறு போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஓட்டுனர் தனசேகரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடலை பார்த்து பிணவறையில் மகன்கள் பிரபு, கணேஷ், சுரேஷ், மகள் – விஜி ஆகியோர் கதறி அழுதனர். தற்கொலைக்கான காரணம் குறித்து அடையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது மகன்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சுமார் ரூ. 20 கோடி வரை பெற்றுக் கொண்டு தயாரிப்பாளர் கே.ராஜனை ஏமாற்றி விட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

இது குறித்து தற்கொலை செய்து கொண்ட தயாரிப்பாளர் கே.ராஜனின் ஓட்டுனர் தனசேகர் மற்றும் உறவினர் அண்ணாதுரை, பேரன் பிரவீன் ஆகியோர் தனித்தனியாக செய்தியாளர்களை சந்தித்தனர். “கடன் பிரச்சனையோ அல்லது குடும்ப பிரச்னை காரணமாகவே தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் ரூ. 20 கோடி வரை ராஜன் பல தயாரிப்பாளர்களுக்கு கடன் கொடுத்துள்ளார், பல பேர் அவருக்கு கடனை திருப்பி தராமல் ஏமாற்றி உள்ளனர். அவருக்கு இதய பிரச்சனை இருப்பதால் சிகிச்சையும் பெற்று வருகிறார். யாருக்கும் தொல்லை கொடுக்கக்கூடாது என நினைத்து இந்த முடிவை எடுத்துவிட்டார் என நினைக்க தோன்றுகிறது. கொரோனா காலத்தில் இருந்தே அவர் சவுண்ட் பிடிக்காது என்பதால் தனிமையில் உள்ளார், குடும்பத்துடன் அவர் தொடர்பில் தான் உள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டு பலர் ஏமாற்றி விட்டனர் என்று குடும்பத்தினர் வேதனையோடு தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து உயிரிழந்த கே.ராஜனின் மூன்றாவது மகன் சுரேஷ் மற்றும் அவரது மகள் விஜயலட்சுமி ஆகியோரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். தயாரிப்பாளர்களுக்கு 20 கோடி ரூபாய் வரை கடன் கொடுத்துவிட்டு அவர்கள் திருப்பி தராததால் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனால் ஹார்ட் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தனர். மேலும் கடனை திருப்பி கொடுக்காமல் இருந்த தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தனர். பணத்தை இழந்து கே.ராஜன் ஏமாந்துள்ளதாக குடும்பத்தினர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதால் போலீசார் அந்த கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். கே.ராஜனின் தான் யாருக்கெல்லாம் பணம் கொடுத்ததும், அது தொடர்பான விவரங்களை டைரியை எழுதி வைத்து இருப்பதாக குடும்பத்தினர் கூறியிருப்பதால் அதனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கே.ராஜனின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது மகனிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு கே.ராஜனின் உடல் அஞ்சலிக்காக தண்டையார்பேட்டையில் உள்ள அவரது மகள் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author