அரசியல் களத்தில் எழும் தற்காலிகப் புயல்களைத் தாங்கி நிற்கும் வலிமை அதிமுகவிற்கு உள்ளதாகவும், கட்சிக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அவற்றை நாமே பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், கட்சியின் ஒற்றுமையைக் காக்கும் நோக்கில் இந்த முக்கியக் கருத்துக்களை அவர் பகிர்ந்துள்ளார். ஜனநாயக ரீதியாகச் செயல்படும் எல்லா அரசியல் கட்சிகளிலும் கருத்து வேறுபாடுகளும், பிரச்சினைகளும் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். அதேபோல், நமது கட்சியிலும் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது அதிருப்திகள் இருப்பின், அதை நாமே அமர்ந்து பேசி சுமுகமாகத் தீர்த்துக் கொள்வோம்.
அரசியல் களத்தில் அவ்வப்போது சில தற்காலிகப் புயல்கள் வந்துபோகத்தான் செய்யும். ஆனால், அந்தப் புயல்களையெல்லாம் தாங்கியும், தாண்டியும் நிமிர்ந்து நிற்கும் ‘ஆயிரங்காலத்துப் பயிர்’ தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். தேர்தல் பின்னடைவுகளையோ, அரசியல் மாற்றங்களையோ கண்டு தொண்டர்கள் கலங்கத் தேவையில்லை என்றும், கட்சியின் உட்கட்சி விவகாரங்களை வெளியாட்கள் பயன்படுத்திக் கொள்ள இடம் கொடுக்காமல், அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
மேலும் தன்னை தூய சக்தி என்று அழைத்துக் கொண்ட அரசு திமுக கூட்டணி கட்சிகளின் காலில் விழுந்து தற்போது அதிமுகவையும் பிளவுபடுத்த நினைக்கும் துஷ்ட சக்தியாக மாறி உள்ளது. அந்த குதிரை பேர அரசின் ஆட்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. அதிமுக எனும் ஆலமரத்தின் அடியிலிருந்து சிலர் அதனை வெட்டி பார்க்க முயல்கிறார்கள். ஆனால் ஒருபோதும் அது நடக்காது. திமுக அதிமுக கூட்டணி என்பது பொய் அதிமுகவில் வாரிசு அரசியலுக்கு இடம் இல்லை. மேலும் எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு பிறகு விவசாயி ஆன நான் கட்சியை வழிநடத்துகிறேன். எனக்குப் பிறகு இன்னொரு சாதாரண ஒருவர் கட்சியை வழிநடத்துவார் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.
