தமிழ் சினிமாவில் மேடைகளில் அஞ்சாமல் பேசக்கூடிய தைரியமான தயாரிப்பாளராக அறியப்பட்ட கே.ராஜன் (85), சென்னை அடையாறு திரு-வி-க பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்தத் திரையுலகையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது காரில் வந்து கொண்டிருந்த அவர், திடீரென காரை நிறுத்தச் சொல்லிவிட்டு ஆற்றில் குதித்து இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். தீயணைப்புத் துறையினர் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், போலீசார் தற்போது தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக கே.ராஜன் கடந்த 5 வருடங்களாகத் தனது குடும்பத்தை பிரிந்து தனியாக ஒரு தனியார் ஓட்டலில் தங்கி வந்தது தெரியவந்துள்ளது. அவர் இந்தத் தீவிரமான முடிவை எடுத்ததற்குக் கடுமையான கடன் சிக்கல் காரணமா, நீண்ட நாள் தனிமை ஏற்படுத்திய மன உளைச்சலா அல்லது வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
இதுவரை தற்கொலைக்கான தெளிவான காரணம் எதுவும் கண்டறியப்படாத நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் இந்தத் துயர சம்பவத்திற்குத் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
