இந்தியாவின் அண்டை நாட்டில் இப்படியொரு விபரீதமா?…

Estimated read time 0 min read

ஆப்கானிஸ்தானில் வறுமை மற்றும் பட்டினியின் கொடுமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, அங்குள்ள மக்கள் தொகையில் சுமார் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர், அதாவது 47 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பசியின் விளிம்பில் தவித்து வருகின்றனர். வேலைவாய்ப்பின்மை மற்றும் வறட்சி காரணமாக ஒரு வேளை உணவிற்கே மக்கள் அல்லாடும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும் வறுமையின் உச்சகட்டமாக, தங்கள் குடும்பத்தை பசியிலிருந்து காப்பாற்றவும், தங்களின் மற்ற குழந்தைகளுக்கு உணவளிக்கவும் பெற்றோர்களே தங்கள் பச்சிளம் குழந்தைகளை விற்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு தந்தை தனது 5 வயது மகளின் மருத்துவச் செலவிற்காக சுமார் 2 லட்சம் ஆப்கானிக்கு அவளை உறவினர் ஒருவருக்கு விற்க ஒப்பந்தம் செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவமும் அங்கு அரங்கேறியுள்ளது.

இந்த மோசமான சூழ்நிலைக்கு ஆப்கானிஸ்தானுக்குக் கிடைத்து வந்த சர்வதேச உதவிகள் பெருமளவில் குறைக்கப்பட்டதே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழங்கி வந்த நிதியுதவி மற்றும் உணவுப் பொருட்கள் கடந்த ஆண்டை விட 70 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது. இதனால் உள்ளூர் மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மருந்துகள் மற்றும் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் தினசரி பல குழந்தைகள் உயிரிழந்து வருவதாக மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தங்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து, வெறும் பழைய ரொட்டியையும் வெந்நீரையும் குடித்து உயிர்வாழும் இம்மாநில மக்களின் துயரத்தைத் துடைக்க சர்வதேச நாடுகள் உடனடியாக முன்வர வேண்டும் என்பதே தற்போதைய அவசரத் தேவையாக உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author