சென்னையில் கடந்த 2013-ஆம் ஆண்டு பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரின் விடுதலையை ரத்து செய்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னையில் பிரபல நரம்பியல் மருத்துவரான சுப்பையா, நிலத் தகராறு காரணமாக ஒரு கும்பலால் மிகக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய இந்தச் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்குக் கீழமை நீதிமன்றம் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
இருப்பினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி வழக்கில் தொடர்புடைய 9 பேரையும் விடுதலை செய்து அதிரடியாக உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகள் 9 பேரின் விடுதலையை எதிர்த்து தமிழக அரசு மற்றும் மருத்துவர் சுப்பையாவின் குடும்பத்தினர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் நீண்ட விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று (மே 19, 2026) இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய 9 பேரின் விடுதலை உத்தரவை உச்சநீதிமன்றம் முற்றிலும் ரத்து செய்தது. மேலும், மருத்துவர் சுப்பையா படுகொலையில் இவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிகள் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு அதிரடியான இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த முக்கியத் தீர்ப்பின் மூலம், கடந்த 13 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்த மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் இறுதியாக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
