சீனா – நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி 90 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

Estimated read time 0 min read

சீனா : வடக்கு பகுதியில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் குறைந்தது 90 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் சீனாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.ஷான்சி மாகாணத்தில் உள்ள லியுஷென்யூ நிலக்கரி சுரங்கத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. டோங்ழோ குழுமம் நடத்தி வரும் இந்த சுரங்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7.29 மணியளவில் திடீரென வாயு வெடிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்து நடந்த நேரத்தில் சுரங்கத்திற்குள் 247 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெடிவிபத்துக்கு பிறகு பலர் சுரங்கத்திற்குள் சிக்கிய நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சம்பவ இடத்திற்கு நூற்றுக்கணக்கான மீட்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். சீன அவசரகால மேலாண்மை அமைச்சகம் சார்பில் 6 மீட்பு குழுக்களில் இருந்து 345 பேர் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊடகங்களில் வெளியான காட்சிகளில், ஆம்புலன்ஸ்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்ததும், மீட்புக்குழுவினர் ஸ்ட்ரெச்சர்களில் காயமடைந்தவர்களை வெளியே கொண்டு வந்ததும் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் தீவிர கவலை தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்கவும், உயிர் பிழைத்தவர்களை கண்டுபிடிக்க எந்த முயற்சியையும் விடக்கூடாது என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த விபத்திற்கான காரணத்தை முழுமையாக விசாரித்து, பொறுப்புக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், சுரங்கத்தை நிர்வகித்து வந்த அதிகாரிகள் சிலர் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெடிவிபத்திற்கான சரியான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

ஆனால், சுரங்கத்திற்குள் மிகவும் ஆபத்தான மற்றும் மணமில்லாத விஷ வாயுவான கார்பன் மோனாக்சைடு அளவு பாதுகாப்பு வரம்பை மீறி இருந்ததாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவில் 2000களின் ஆரம்ப காலங்களில் நிலக்கரி சுரங்க விபத்துகள் அடிக்கடி நடந்துவந்தன.

பின்னர் பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டாலும், இப்படி பெரிய விபத்துகள் அவ்வப்போது தொடர்ந்து நடந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.தற்போது மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலர் இன்னும் சுரங்கத்திற்குள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சமும் நிலவி வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author