அமெரிக்கா-ஈரான் இடையே உச்சகட்ட போர் பதற்றம்..! 

Estimated read time 0 min read

உலக நாடுகளை உலுக்கி வரும் சர்வதேச அரசியல் பதற்றங்களுக்கு இடையே, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தெற்கு ஈரானில் உள்ள ஈரான் ராணுவத் தளங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் மிகக் கொடூரமான வான்வெளித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்த அதிரடி நடவடிக்கை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள அமெரிக்க மத்திய ராணுவக் கட்டளையகம் சர்வதேசக் கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள தங்களது படை வீரர்களின் மற்றும் போர்க்கப்பல்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இந்தத் தற்காப்புத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்தத் திடீர் தாக்குதல் காரணமாக, கச்சா எண்ணெய் போக்குவரத்துப் பாதையான வளைகுடா நாடுகளில் மீண்டும் ஒரு போர்ச் சூழல் உருவாகி உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்க ராணுவ அதிகாரிகளின் கூற்றுப்படி, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படைக்கு சொந்தமான இரு சந்தேகத்திற்கிடமான படகுகள், உலகளாவிய எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமாகக் கருதப்படும் ‘ஹோர்முஸ்’ கடல் பகுதியில் சர்வதேசக் கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் கடல் கன்னிவெடிகளை வைக்க முயன்றுள்ளன. இதனை முன்கூட்டியே கண்டறிந்த அமெரிக்க கடற்படை மற்றும் விமானப்படை, உடனடியாகச் கூட்டு நடவடிக்கையில் இறங்கி ஈரானின் அந்த இரு போர்க்கப்பல்களையும் நடுக்கடலிலேயே சுட்டு அழித்தன. இதன் தொடர்ச்சியாக, ஈரானின் முக்கிய ராணுவப் பகுதியான ‘பந்தர் அப்பாஸ்’ என்ற இடத்தில் அமைந்துள்ள, அமெரிக்கப் போர் விமானங்களைத் தாக்க முயன்ற ஈரானின் நிலப்பரப்பில் இருந்து வான்நோக்கிப் பாயும் ஏவுகணைத் தளங்களையும் அமெரிக்கா குண்டுவீசி முற்றிலும் தரைமட்டமாக்கியது.

அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதலால் தெற்கு ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ், சீரிக் மற்றும் ஜாஸ்க் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்து நேர்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகளால் அதிர்ந்ததாக ஈரான் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த மோதல் காரணமாக ஈரான் எவ்வித சமரச உடன்படிக்கைக்கும் தயாராக இல்லை என்று அறிவித்துள்ளதால், இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்த ஹோர்முஸ் கடல் வழியில்தான் இந்தியாவிற்குத் தேவையான பெரும்பாலான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால், இப்பகுதியில் போர் மூண்டால் ஏற்கனவே பணவீக்கத்தால் தவித்து வரும் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்து, கடுமையான விலைவாசி உயர்வை ஏற்படுத்தும் என்ற அச்சமும் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.

You May Also Like

More From Author