நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதிமுக, எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சி.வி.சண்முகம் அணி என இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ளது.
இதில் சண்முகம் தரப்பினர் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளதால், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பலர் அடுத்தடுத்து தவெக-விற்குத் தாவும் சூழல் உருவாகியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சத்தியபாமா, ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. ஜெயக்குமார், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் ஆகிய மூன்று பேரும் நேற்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முக்கியப் பிரமுகரான இசக்கி சுப்பையாவும் அதிமுக-வில் இருந்து விலகியுள்ளார். இன்று அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்காகச் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். ஆனால், அவர் கொண்டு வந்த ராஜினாமா கடிதம் கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு பிரிண்ட் எடுக்கப்பட்டதாக இருந்ததால், அதனை ஏற்றுக்கொள்ளச் சபாநாயகர் மறுத்துவிட்டார்.
சட்டமன்ற விதிமுறைப்படி சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்யும்போது, தனது கைப்பட எழுதிய கடிதத்தையே சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் இந்தத் தடை ஏற்பட்டது. இதையடுத்து, இன்னும் பத்து நிமிடத்தில் தனது கைப்பட கடிதத்தை எழுதிக் கொண்டு வருவதாகக் கூறிவிட்டு இசக்கி சுப்பையா அங்கிருந்து தனது அலுவலக அறைக்குத் திரும்பினார். ஏற்கனவே 3 எம்.எல்.ஏ-க்கள் தவெக-வில் இணைந்துள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு முக்கிய அதிமுக எம்.எல்.ஏ. அடுத்தடுத்து ராஜினாமா செய்ய முன்வந்துள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்பிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.
