தமிழகம் முழுவதும் நாளை மறுதினம் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 வயதிற்குட்பட்ட சுமார் 53 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி அட்டவணைப்படி ஏற்கனவே குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டிருந்தாலும், நாளை மறுநாள் மீண்டும் சொட்டு மருந்து செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், அங்கன்வாடிகள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பேருந்துநிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சுங்கச்சாவடிகளில் தற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டு ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.
மலைப்பகுதிகள் மற்றும் தொலைதூர இடங்களுக்கு நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் மருந்து வழங்கப்படவுள்ளது.
இப்பணியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடவுள்ளதாகவும், பிறமாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களது குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து போடுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
