சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் அடுத்தடுத்து அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்றைய நிலவரப்படி தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சவரனுக்கு ரூ.2,240 வரை உயர்ந்து ரூ.1,07,840-க்கு விற்கப்பட்ட தங்கம், அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 6-ம் தேதி கிராம் ஒன்றுக்கு ரூ.270 அதிகரித்து ரூ.13,750-க்கும், சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து ரூ.1,10,000-க்கும் விற்பனையானது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்து கிராம் ரூ.13,900-க்கும், சவரன் ரூ.1,11,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும், ஆகஸ்ட் 8ஆம் தேதி கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,965-க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,11,720-க்கும் விற்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமையான ஆகஸ்ட் 9ஆம் தேதி தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி பழைய விலையே தொடர்ந்தது.
பின்னர் ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று சிறிய அளவிலான சரிவைச் சந்தித்து கிராம் ஒன்று ரூ.13,950-க்கும், சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்தச் சூழலில், இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையானது மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.300 அதிகரித்து ரூ.14,250 என்ற புதிய உச்சத்திற்கும், சவரனுக்கு அதிரடியாக ரூ.2,400 அதிகரித்து ரூ.1,14,000 என்ற வரலாற்றுச் சாதனை விலையிலும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்துடன் சேர்த்து வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.260-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
