பிரான்ஸ் நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, வழக்கத்தை விட சுமார் 1,000 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜூன் 24-ம் தேதி முதல் வெப்பநிலை அபாயகரமான நிலையை எட்டியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களில் 85 சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, மருத்துவமனைகளை விட வீடுகளிலேயே முதியவர்கள் அதிக அளவில் உயிரிழந்துள்ளனர்.
பாரிஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டிப் பதிவாகியுள்ளது, இது கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வெப்பநிலையாகக் கருதப்படுகிறது.
கடும் வெப்பத்திலிருந்து தப்பிக்க மக்கள் சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட பொது இடங்களுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றனர். தலைநகர் பாரிஸில் மட்டும் கடந்த பல நாட்களில் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது, இது முன்னெப்போதும் இல்லாத மாற்றமாகும்.
தற்போது வெப்பநிலை சற்று குறையத் தொடங்கியுள்ள போதிலும், இந்த வெப்ப அலையினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இறுதி உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில், தனிமையில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் அண்டை வீட்டார்களை முறையாகக் கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
