‘ஆதிதிராவிடர் நலத்துறை’ இனி அதிகாரப்பூர்வமாக ‘சமூக நீதி துறை’ எனப் பெயர் மாற்றம்..!

Estimated read time 1 min read

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் (M. Sai Kumar) வெளியிட்டுள்ள அரசாணையில்,

சமீபத்தில் தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (VCK) முக்கியத் தலைவர்களில் ஒருவரான வன்னி அரசு புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்ற அந்தத் தருணத்திலேயே, அவர் சமூக நீதி துறை அமைச்சர் என்றே தமிழக அரசால் குறிக்கப்பட்டார்.அப்போதே இந்தத் துறையின் பெயர் மாற்றப்படப் போகிறது என்ற பரவலான பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 166-ன் கீழ் (Article 166 of the Constitution of India) வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், ஆளுநரின் ஒப்புதலுடன் இந்த அதிகாரப்பூர்வப் பெயர் மாற்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மனிதவள மேலாண்மைத் துறை மூலம் ஜூலை 6, 2026 தேதியிட்டு இந்த அதிரடி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அலுவல் விதிமுறைகள் 1978-ன் (Tamil Nadu Government Business Rules, 1978) முதல் அட்டவணையில் உள்ள பழைய பெயர் நீக்கப்பட்டு, இனி சமூக நீதி துறை என்ற புதிய பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

வெறும் பெயர் மாற்றம் மட்டுமின்றி, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார, கல்வி மற்றும் சமூக உரிமைகளை ‘சமூக நீதி’ என்ற பரந்த பார்வையின் கீழ் கொண்டு வருவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

பெயர் மாற்றத்திற்கான அரசாணை நகல், தலைமைச் செயலகத்தின் அனைத்துத் துறைச் செயலாளர்கள், முதலமைச்சரின் செயலாளர்கள் மற்றும் ஆளுநரின் செயலகம் ஆகியவற்றுக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் தங்களின் பாராட்டுகளையும் வரவேற்புகளையும் தெரிவித்து வருகின்றனர். பெரியார், அண்ணா, கலைஞர் காட்டிய சமூக நீதிப் பாதையில் தற்போதைய அரசு எடுத்துள்ள மிக முக்கியமானதொரு கொள்கை முடிவு இதுவெனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

You May Also Like

More From Author