ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக வலம் வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தற்போது சோதனை காலமாக அமைந்துள்ளது. அம்பானி குடும்பத்தின் உரிமையில் செயல்பட்டு வரும் இந்த அணியின் வரலாறு பல்வேறு கோப்பைகளால் நிறைந்தது. ஆனால் இங்கிலாந்தின் ‘தி ஹண்ட்ரெட்’ தொடரில் இந்த முறை எதிர்பாராத பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணியில் பெரும்பங்குகளை வாங்கிய மும்பை இந்தியன்ஸ், அணியின் பெயரை MI லண்டன் என மாற்றியது. பெயர் மாற்றத்துக்குப் பிறகு அந்த அணியின் வெற்றி பயணமும் தடம் மாறியுள்ளது.
தி ஹண்ட்ரெட் தொடரின் கடந்த ஐந்து சீசன்களிலும் ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணி ஆடவர் அல்லது மகளிர் பிரிவில் குறைந்தது ஒரு கோப்பையையாவது வென்றிருந்தது. ஆனால் இந்த முறை MI லண்டன் அணியின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இரண்டுமே பிளேஆஃப் சுற்றுக்குக் கூட முன்னேற முடியவில்லை. ஆடவர் பிரிவில் கடைசி லீக் ஆட்டத்தில் பர்மிங்காம் பீனிக்ஸ் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 157 ரன்கள் எடுத்த MI லண்டன், எதிரணியை 155 ரன்களில் கட்டுப்படுத்தியது. இதன் மூலம் 20 புள்ளிகளைப் பெற்றாலும், நெட் ரன் ரேட் காரணமாக 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டு எலிமினேட்டர் வாய்ப்பை இழந்தது.
மறுபுறம் மகளிர் பிரிவிலும் MI லண்டனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடைசி லீக் ஆட்டத்தில் பர்மிங்காம் பீனிக்ஸ் அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த MI லண்டன் அணி 120 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், பர்மிங்காம் அணி 94 பந்துகளிலேயே இலக்கை எட்டியது. இதனால் MI லண்டன் அணி ஒரு வெற்றி, ஒரு டை என 6 புள்ளிகளுடன் 8 அணிகள் கொண்ட பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. இதன் மூலம் இரு பிரிவுகளிலும் பிளேஆஃப் வாய்ப்பை இழந்தது.
2021-ஆம் ஆண்டு தொடங்கிய தி ஹண்ட்ரெட் தொடரில் ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணியின் ஆதிக்கம் குறிப்பிடத்தக்கது. முதல் இரண்டு சீசன்களில் மகளிர் பிரிவில் தொடர்ந்து இரண்டு கோப்பைகளை வென்ற அந்த அணி, ஆடவர் பிரிவில் கடந்த மூன்று சீசன்களிலும் தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்றது. இவ்வாறு தொடர்ந்து ஐந்து சீசன்களில் கோப்பையை வென்ற அணிக்கு தற்போது முதல் முறையாக கோப்பையில்லாத சீசன் அமைந்துள்ளது. ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் தொடர்ந்து சவால்களை சந்தித்து வரும் நிலையில், WPL மற்றும் MLC தொடர்களிலும் நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க முடியாதது அந்த அணிக்கு கூடுதல் பின்னடைவாக அமைந்துள்ளது.
