சிகரெட் பிடிப்பவர்களுக்கு மட்டும்தான் பாதிப்பு ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், சிகரெட் அல்லது பிற புகையிலைப் பொருட்களை ஒருவர் பயன்படுத்தும்போது அருகில் இருப்பவர்கள் அந்தப் புகையை சுவாசிப்பதும் உடல்நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இதைத்தான் இரண்டாம் நிலை புகை என்று குறிப்பிடுகின்றனர். உலக சுகாதார அமைப்பும் இதற்கு பாதுகாப்பான அளவு என்று எதுவும் இல்லை எனத் தெரிவிக்கிறது; இதய நோய், பக்கவாதம் மற்றும் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல பிரச்னைகளுடன் இது தொடர்புடையது.
இந்நிலையில், The Lancet Public Health இதழில் வெளியான புதிய ஆய்வு, 1990 முதல் 2023 வரையிலான 204 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் தரவுகளை ஆய்வு செய்துள்ளது. அதன்படி, 2023-ல் உலகளவில் சுமார் 270 கோடிக்கும் அதிகமானோர் இரண்டாம் நிலை புகைக்கு ஆளாகியிருந்தனர். இதன் காரணமாக அந்த ஆண்டில் சுமார் 16.6 லட்சம் முன்கூட்டிய மரணங்கள் ஏற்பட்டதாக ஆய்வு மதிப்பிட்டுள்ளது.
இந்தியாவிலும் நிலை கவலைக்குரியதாக உள்ளது. 2023-ல் இந்தியாவில் சுமார் 44.4 கோடி பேர் இரண்டாம் நிலை புகைக்கு ஆளாகியிருந்ததாக ஆய்வு கணித்துள்ளது. மேலும், இதனுடன் தொடர்புடைய மரணங்கள் 1990-ஐ ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்து, 2023-ல் சுமார் 3.25 லட்சம் மரணங்கள் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக வீட்டுக்குள் அல்லது மூடிய இடங்களில் ஒருவர் புகைபிடிப்பது அருகில் இருப்பவர்களுக்கு தொடர்ந்து புகை வெளிப்பாட்டை ஏற்படுத்தலாம். குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் ஏற்கெனவே இதயம் அல்லது சுவாசம் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். எனவே “நான் சிகரெட் பிடிப்பதில்லை” என்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், வீடு, கார் மற்றும் மூடிய பொது இடங்களை புகையில்லா இடங்களாக வைத்திருப்பதும் முக்கியம்.
