4 ஓவரில் 6 விக்கெட்!…. 18 பந்தில் ஒரு ரன் கூட இல்லை!…

Estimated read time 1 min read

மகளிர் ஆசியக் கோப்பை 2026 தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 55 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான், ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக வெற்றி பெற்றது. அரையிறுதிக்கு செல்ல இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் களமிறங்கிய பாகிஸ்தான், 72 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தியது. குறிப்பாக பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நஷ்ரா சந்து இந்தப் போட்டியில் மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு இந்த முறையும் தொடக்கம் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக அமையவில்லை. தொடக்க வீராங்கனை ஷவால் சுல்ஃபிகார் 35 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். ஆயிஷா ஜாஃபர் 26 ரன்களும், கேப்டன் ஃபாத்திமா சனா 24 ரன்களும் சேர்த்தனர். இருப்பினும் மற்ற வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் பாகிஸ்தான் அணி தடுமாறியது. 80 ரன்களில் 3-ஆவது விக்கெட்டை இழந்த அந்த அணி, 101 ரன்களை எட்டுவதற்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியில் 20 ஓவர்களில் 143 ரன்களை மட்டுமே பாகிஸ்தான் எடுத்தது. ஹாங்காங் அணியின் ஜாய்லின் கவுர் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

143 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணிக்கு பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை. தொடக்கம் முதலே விக்கெட்டுகள் சரியத் தொடங்கிய நிலையில், ஹாங்காங் அணி 19 ஓவர்களில் வெறும் 71 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்காக கேரி சான் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். ஆனால் அதற்காக அவர் 47 பந்துகளை எதிர்கொண்டார். மறுபுறம் பாகிஸ்தான் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் நஷ்ரா சந்து தனி ஆளாக ஹாங்காங் பேட்டிங் வரிசையை சிதறடித்தார். 4 ஓவர்கள் வீசிய அவர் வெறும் 7 ரன்களை மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். அதிலும் 18 பந்துகளில் ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி மகளிர் ஆசியக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெறும் அரையிறுதியில் நடப்பு சாம்பியனான இலங்கை அணியை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது. குரூப் பி பிரிவில் விளையாடிய இலங்கை அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல் இந்திய அணி தனது அரையிறுதிப் போட்டியில் செப்டம்பர் 10-ஆம் தேதி களமிறங்குகிறது. இந்தியாவுக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான், அதன்பிறகு ஹாங்காங் அணியை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

You May Also Like

More From Author