பல்கலைக்கழக செலவு பில்களை பார்த்து அதிர்ந்த அதிகாரிகள்…!!! 

Estimated read time 0 min read

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா செலவுகள் தொடர்பான தகவல்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களில், அரை கப் பிளாக் டீ எனப்படும் கட்டிங் டீக்கு ரூ.450 செலவு செய்யப்பட்டதாகவும், வெறும் ஒரு கிலோமீட்டர் தூரம் காரில் பயணம் செய்ய ரூ.3,000 வாடகை செலுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கான இந்தச் செலவுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக, சாதாரண பொருள்களுக்கே இவ்வளவு அதிகமான தொகை செலவிடப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும், பல்கலைக்கழக வளாகத்திலேயே பெரிய அளவிலான அனைத்து வசதிகளும் கொண்ட அரங்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்காக போபாலில் உள்ள ரவீந்திர பவன் அரங்கம் வாடகைக்கு எடுக்கப்பட்டு, அதற்காக ரூ.2 லட்சம் செலுத்தப்பட்டதாக ஆர்டிஐ தகவலில் தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான அரங்கம் இருக்கும்போது, வெளியில் அரங்கம் வாடகைக்கு எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கான நிர்வாக அனுமதி யாரால் வழங்கப்பட்டது, எந்த அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்தும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மேலும் ஒரு முக்கிய தகவலும் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழகத்தின் நிதிக் கட்டுப்பாட்டாளர், அதிக தொகை கொண்டதாகவும் வழக்கத்துக்கு மாறானதாகவும் கருதப்பட்ட சில பில்கள் குறித்து தனது ஆட்சேபனையை பதிவு செய்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த ஆட்சேபனையை மீறி சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களுக்கு பணம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, பட்டமளிப்பு விழாவுக்காக செலவிடப்பட்ட ஒவ்வொரு தொகைக்கும் உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதிகள் இருந்தனவா என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தத் தகவல்களை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும் ஆர்டிஐ ஆர்வலருமான தர்மேந்திர சிங் கௌர் வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட பில்களை மீண்டும் தணிக்கை செய்து, பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளையில், ஆர்டிஐயில் வெளியாகியுள்ள பில்கள் மற்றும் தொகைகள் மட்டும் அடிப்படையாகக் கொண்டு நிதி முறைகேடு நடந்ததாக இறுதி முடிவுக்கு வர முடியாது என்றும், அதிகாரப்பூர்வ தணிக்கை மற்றும் விசாரணைக்குப் பிறகே உண்மை நிலவரம் தெளிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டமளிப்பு விழாவுக்காக செலவிடப்பட்ட முழுமையான தொகை விவரங்களைப் பல்கலைக்கழகம் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

You May Also Like

More From Author