சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “மாணவர்களின் குரல்” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இன்று (அக்.10) சென்னை வருகிறார்.
ராகுல் காந்தியின் சென்னை பயணம் குறித்த விவரங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், விருதுநகர் தொகுதியின் மக்களவை உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், “இன்று (அக்.10) நண்பகல் 12.30 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வருகை தருகிறார்.
அதைத் தொடர்ந்து, மதியம் 01.30 மணிக்கு சென்னை நீலாங்கரையில் உள்ள காசுவரினா டிரைவ் இல்லத்தில் முதலமைச்சர் விஜய்யை ராகுல் காந்தி நேரில் சந்தித்துப் பேசுகிறார். அதன் தொடர்ச்சியாக, சென்னை தீவுத்திடலில் மாலை 05.00 மணிக்கு நடைபெறும் “மாணவர்களின் குரல்” நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய்- ராகுல் காந்தி சந்திப்பின்போது, எஸ்ஐஆர் விவகாரம், வரும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கான பிரதிநிதித்துவம், கூட்டணியின் எதிர்க்காலத் திட்டங்கள், மத்திய அரசின் மக்கள் விரோதப்போக்கு போன்றவைக் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ராகுலுக்கு தனது இல்லத்தில் முதல்வர் விஜய் மதிய விருந்து அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆக.01- ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி சென்னை வந்திருந்தார். எனினும், அப்போது முதலமைச்சர் விஜய்யை அவர் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2029- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் விஜய் என தவெகவினரும், பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என காங்கிரஸ் கட்சியினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் முதலமைச்சர் விஜய்- ராகுல் காந்தியின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
சென்னைக்கு வரும் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பை அளிக்க காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தியின் தமிழ்நாடு பயணத் திட்டம் –
அக்டோபர் 10, 2026:12.30 சென்னை விமான நிலையம்
அக்டோபர் 10
· மதியம் 1:30 மணி: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருடன் சந்திப்பு – 36, காசுவரினா டிரைவ், சென்னை· மாலை 5:00 மணி: – “மாணவர்களின் குரல்” தீவுத் திடல், சென்னை
#RahulGandhiInChennai
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) October 9, 2026
