தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பன்னிரண்டாம் வகுப்பு (12th Standard) மாணவர்களுக்கான 2027-ம் ஆண்டு பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த அட்டவணையின்படி, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்குகின்றன. பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் மாதம் 3-ம் தேதி புதன்கிழமை தொடங்கி மார்ச் மாதம் 29-ம் தேதி திங்கட்கிழமை வரை நடைபெறவுள்ளன. முதல் நாளான மார்ச் 3-ம் தேதி தமிழ் பாடத் தேர்வுடன் தேர்வுகள் தொடங்குகின்றன.
இதனைத் தொடர்ந்து மார்ச் 8-ம் தேதி ஆங்கிலப் பாடத் தேர்வும், மார்ச் 12-ம் தேதி வேதியியல் மற்றும் கணக்குப் பதிவியலும், மார்ச் 15-ம் தேதி கணினி அறிவியல், பயோ-வேதியியல் மற்றும் புள்ளியியலும் நடைபெறுகின்றன. மேலும், மார்ச் 19-ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு பாடங்களும், மார்ச் 23-ம் தேதி இயற்பியல், பொருளாதாரம் பாடங்களும், நிறைவாக மார்ச் 29-ம் தேதி கணிதம், விலங்கியல் மற்றும் வணிகவியல் பாடத் தேர்வுகளும் நடைபெற்றுப் பொதுத்தேர்வுகள் முழுமையாக நிறைவடைகின்றன.

முதற்கட்டமாக, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் (Practical Exams) வரும் 2027 பிப்ரவரி 8 முதல் 18 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பொதுத்தேர்வுகளும் மார்ச் 29-ம் தேதியோடு நிறைவடையும் நிலையில், தேர்வு முடிவுகள் மே மாதம் 7-ம் தேதி வெளியிடப்படும் எனத் தற்காலிகத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மாணவர்கள் தேர்வுக்குத் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர்.
