ரூ.9,192 கோடி தேவைப்படும் இடத்தில் வெறும் 100 கோடியா? – கொதித்தெழுந்த அன்புமணி!

Estimated read time 1 min read

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 125 நாள்கள் வேலை வழங்குவதற்கான வளர்ச்சியடைந்த பாரதம் & கிராமப்புற வேலைவாய்ப்பு & வாழ்வாதார உறுதித் திட்டத்தின்படி கூடுதலாக 25 நாள்கள் வேலை வழங்குவதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. ஆண்டுக்கு 150 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் சரியானது என்றாலும் கூட, அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி அரசின் நோக்கத்தை நிறைவேற்ற போதாது.

தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்படும் என்று தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 100 நாள்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டு வந்த நிலையில், அத்திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்த மத்திய அரசு, ஆண்டுக்கு 125 நாள்கள் வேலை வழங்கப்படும் என்று அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அத்துடன் கூடுதலாக 25 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு இப்போது ரூ.100 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆனால், இந்த நிதியைக் கொண்டு கூடுதலாக 25 நாள்கள் வேலை வழங்க முடியுமா? என்பது தான் வினா. வளர்ச்சியடைந்த பாரதம் & கிராமப்புற வேலைவாய்ப்பு & வாழ்வாதார உறுதித் திட்டத்தின்படி வேலை பெறுவதற்காக தமிழ்நாட்டில் 81.08 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்திருக்கின்றன. அவர்களில் 69.11 லட்சம் குடும்பங்கள் தொடர்ந்து வேலை பெற்று வருகின்றன. வேலை உறுதித் திட்டத்தின்படி ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ.271.38 ஊதியம் வழங்கப்படுகிறது. இது தவிர இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான பொருள்கள் மற்றும் இத்திட்டத்தை செயல்படுத்தும் திறன் பெற்ற பணியாளர்களுக்கான ஊதியத்திற்காக ஒரு மனித வேலை நாளுக்கு ரூ.208.64, நிர்வாகச் செலவுகளுக்காக ஒரு மனித வேலை நாளுக்கு ரூ.53 செலவிடப்படுகிறது. இவற்றையும் சேர்த்து ஒருவருக்கு ஒரு நாளைக்கு 532.02 ரூபாயை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செலவிட வேண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 69.11 லட்சம் குடும்பங்களுக்கு இத்திட்டத்தின்படி வேலை வழங்க வேண்டியுள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் வேலை வழங்குவதற்காக ஒரு நாளைக்கு ரூ.367.68 கோடி தேவைப்படும். கூடுதலாக 25 நாள் வேலைவாய்ப்பை தமிழக அரசு தான் வழங்குகிறது என்பதால், அதற்கான அனைத்து செலவுகளையும் மாநில அரசு தான் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். ஒரு நாளைக்கு ரூ.367.68 கோடி வீதம் 25 நாள்களுக்கு வேலை வழங்க குறைந்தது ரூ.9,192 கோடி தேவைப்படும். ஆனால், தமிழக அரசு ஒதுக்கியுள்ள ரூ.100 கோடி என்பது தேவைப்படும் நிதியில் 1.08 விழுக்காடு மட்டும் தான். இந்த நிதியைக் கொண்டு ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பயனாளிகளுக்கு ஒரே ஒரு நாளைக்குக் கூட வேலை வழங்க முடியாது.

வளர்ச்சியடைந்த பாரதம் & கிராமப்புற வேலைவாய்ப்பு&வாழ்வாதார உறுதித் திட்டம் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்பின் நேற்று வரை 112 நாள்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், இதுவரை மொத்தம் 5.32 கோடி மனித நாள்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், இத்திட்டத்தில் அவற்றில் இதுவரை 38.08 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் சராசரியாக 13.37 நாள்கள் வேலை வழங்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இவர்கள் தவிர மீதமுள்ள 31.10 லட்சம் குடும்பங்களுக்கு இதுவரை ஒரே ஒரு நாள் கூட வேலை வழங்கப்படவில்லை. அவர்களையும் கணக்கில் கொண்டால், இந்தத் திட்டத்தின் கீழ் சராசரியாக ஒரு குடும்பத்திற்கு 7.69 நாள்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் நிலவும் வறுமையைப் போக்குவதற்கு இந்த அளவிலான வேலைவாய்ப்பு போதவே போதாது.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் மக்களுக்கு போதிய அளவில் வேலை வழங்க முடியாததற்கு முதன்மைக் காரணம் நிதிப்பற்றாக்குறை தான். இத்திட்டத்திற்கான நிதியில் பெரும் பகுதியை மத்திய அரசு தான் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின்படி வேலை வழங்குவதற்கான ஊதியமும், பிற செலவுகளும் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. 2021-&22 முதல் 2024-&25ம் ஆண்டு வரை சராசரியாக முறையே 50.95, 50.96, 59.44, 46.86 நாள்கள் வேலை வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 25 நாள்களாகக் குறைய காரணம் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது தான்.

நடப்பாண்டில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு முறையிலேயே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை இத்திட்டத்தின்படி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை மத்திய அரசே முழுமையாக வழங்கி வந்த நிலையில், நடப்பாண்டில் 60% மட்டுமே வழங்குகிறது. 125 நாள் வேலை உறுதித் திட்டத்திற்காக தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ரூ.7,957.57 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு அதன் பங்காக 40% தொகை ரூ.5305.04 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மக்களுக்கு வேலை வழங்குவதற்கு இந்த நிதி போதுமானதல்ல.

150 நாள்கள் வேலை

தமிழ்நாட்டு மக்களுக்கு ஆண்டுக்கு 150 நாள்கள் வேலை வழங்குவதென்பது பெரும் கனவு. அதை உடனடியாக சாத்தியமாக்குவது கடினம் எனும் நிலையில், நடப்பாண்டில் மத்திய அரசின் பங்களிப்புடன் 60 நாள்கள், மாநில அரசின் நிதியில் 15 நாள்கள் என மொத்தம் 75 நாள்களாவது வேலை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். மத்திய அரசின் பங்களிப்புடன் 60 நாள்கள் வேலை வழங்க ரூ.22,060 கோடியும், மாநில அரசு தன்னிச்சையாக 15 நாள் வேலை வழங்க ரூ.5,515 கோடியும் தேவைப்படும். இதற்கான மத்திய அரசின் பங்களிப்பை பேச்சு நடத்தி பெறவும், மாநில அரசின் பங்களிப்பை உயர்த்தி வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author