தமிழ் சினிமா பார்த்திராத ஒரு புதிய உலகத்தையும் கண்முன்னே கொண்டுவரும் நோக்கில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் படக்குழுவினர் World Of Mahasakthi என்ற பிரத்யேக டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த ஆன்மீகத் திரைப்படத்தின் வீடியோ வெளியாகி, தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
முந்தைய கால பக்திப் படங்களின் பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, அதிநவீன கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான பின்னணியில் இந்த ஆன்மீகக் காவியம் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் முதன்மை அம்மன் பாத்திரத்தில் மீண்டும் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ நயன்தாரா நடிக்கிறார். அவருடன் துனியா விஜய், ரெஜினா கசான்ட்ரா, ஊர்வசி, யோகி பாபு, மைனா நந்தினி, ‘கே.ஜி.எஃப்’ புகழ் கருடா ராம் மற்றும் அபினயா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்து களமிறங்குகிறது.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்த சுந்தர்.சி இந்த மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குகிறார். மேலும் ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். இவர்களுடன் இணைந்து குஷ்பூ சுந்தர், குஷ்மிதா கணேஷ், இஷான் சக்சேனா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகப் பங்களிக்கின்றனர்.
இந்த திரைப்படம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. மேலும் இந்த நிலையில் ஜெய்லர் 2 திரைப்படத்துடன் தியேட்டர்களில் வெளியான மூக்குத்தி அம்மன் 2 படத்தின் டீசர் தற்போது youtube-ல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
