வெனிசூலா : கனரக கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பதற்காக அமெரிக்கா இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்கும் நோக்கில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் சுத்திகரிப்புத் திறனைப் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ, இந்தியாவை “எண்ணெய் சுத்திகரிப்பு வல்லரசு” (Refining Superpower) என்று மனதாரப் பாராட்டியுள்ளார்.
மிகவும் அடர்த்தியான மற்றும் கடினமான வெனிசூலா கச்சா எண்ணெயைப் பிரித்தெடுத்து பெட்ரோல், டீசலாக மாற்றும் அதிநவீனத் தொழில்நுட்பத் திறன், உலக அளவில் இந்தியாவின் ரிலையன்ஸ் மற்றும் நயாரா எனர்ஜி போன்ற நிறுவனங்களிடம் மட்டுமே பெரிய அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வெனிசூலாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் சந்தைக்கு வரும்போது, அதனைச் சுத்திகரிக்கும் செயல்பாட்டில் இந்தியா நிச்சயம் முக்கியப் பங்காற்ற முடியும் என்று அமெரிக்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் உலகின் மிகப்பெரிய ஒற்றை இட சுத்திகரிப்பு ஆலை வளாகத்திற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இன்று நேரில் செல்ல உள்ளார். அங்கு ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குழுவினரைச் சந்தித்து, வெனிசூலா கச்சா எண்ணெயை அதிக அளவில் சுத்திகரிப்பது மற்றும் அங்கு எண்ணெய் உற்பத்தியை மேம்படுத்துவது குறித்தும் அவர் விரிவான ஆலோசனைகளை நடத்த உள்ளார்.
