இந்தியா–சீனா எல்லையில் இன்னும் பதற்றம்! முதன்முறையாக உறுதிப்படுத்திய ITBP தலைவர்

அருணாச்சல பிரதேசம் : எல்லையில் கடந்த ஜூலை மாதம் முதல் இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களுக்கிடையே நேரடி மோதல்கள் (Face-offs) ஏற்பட்டு, அது தற்போதும் நீடித்து வருவதாக இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையின் (ITBP) இயக்குநர் ஜெனரல் சத்ருஜித் சிங் கபூர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

எல்லையில் நிலவி வரும் இந்தத் தீவிரமான சூழல் குறித்துப் பாதுகாப்புப் படையின் உயர்தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியாவது இதுவே முதல் முறையாகும். கடந்த சில நாட்களாக அருணாச்சல பிரதேச எல்லைப் பகுதியின் பல்வேறு இடங்களில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் நேருக்கு நேர் சந்திக்கும் மோதல் சூழல் உருவானதாகவும், அந்தப் பதற்றம் இன்னும் முழுமையாகத் தணியவில்லை என்றும் டெல்லியில் நடைபெற்ற இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை வீரர்களுக்கான பாராட்டு விழாவில் இயக்குநர் சத்ருஜித் சிங் கபூர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வந்திருந்த காலகட்டத்திலும் கூட, எல்லையில் இந்த ராணுவ மோதல்கள் தொடர்ந்து நீடித்ததாக அவர் விவரித்துள்ளார்.

அரசு வட்டாரங்களின்படி, அருணாச்சல பிரதேசத்தின் மேல் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள தாக்சிங் வட்டாரத்தின் அசாபிலா எல்லைப் பகுதியில் கடந்த ஜூலை மாத இறுதியில் இருந்தே இந்த எல்லைப் பதற்றம் தொடங்கி நீடித்து வருகிறது. இந்தியாவின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியின் (LAC) அருகே உள்ள ஒரு உயர்ந்த பகுதியில் சீன ராணுவத்தினர் கூடாரங்களை அமைத்ததைத் தொடர்ந்து இந்த மோதல் சூழல் தீவிரமடைந்துள்ளது.

எல்லையில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பல்வேறு கட்ட ராணுவ மற்றும் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வரும் வேளையிலும், தற்போதும் பல இடங்களில் இந்த மோதல்கள் தொடர்வது எல்லைப் பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது.

You May Also Like

More From Author