மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய வைபவமான திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழா 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக் விஜயம், மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிலையில், கீழமாசி வீதியில் உள்ள தேரடி பகுதிக்கு மீனாட்சிஅம்மனும், சுவாமியும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அழைத்து வரப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்ட சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் ஒரு தேரிலும் , மீனாட்சி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருள ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அப்போது மங்கள வாந்தியங்கள், சங்கு முழங்க அரோஹரா, நமச்சிவாய, ஓம்சக்தி நாமங்களுடன் விண்ணை முட்டும் அளவிற்கு பக்தர்கள் கோஷங்களை எழுப்பினர்.