டெல்லி சென்றுள்ள நயினார் நாகேந்திரன் அவர்கள், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதில் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள தனது தேர்தல் பரப்புரை பயணம் குறித்து விரிவாக பேசியிருக்கிறார். மேலும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக பாஜக சார்பில் முன்னெடுக்கப்படும் வியூகங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்து பேசியுள்ளார். யாருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, அடுத்து யாரெல்லாம் கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது என ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய சூழலில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளை இழுக்க பாஜக காய் நகர்த்தும் என்கின்றனர். இந்த சந்திப்பில் ஒன்றுபட்ட அதிமுகவிற்காக முன்னெடுக்கப்படும் விஷயங்கள் பலனளிக்கின்றனவா? எடப்பாடி பழனிசாமி இறங்கி வருவதற்கான சூழல் இருக்கிறதா? என்பது தொடர்பாக பேசியிருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் ஜே.பி.நட்டாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், வரும் அக்டோபர் 12ஆம் தேதி மதுரையில் இருந்து எங்களின் மக்களை சந்திக்கும் பயணம் தொடங்கவுள்ளது. இதில் ஜே.பி.நட்டா அவர்கள் வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.
அவர்கள் முடிந்தவரை வருவதற்கு முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்கள். முன்னதாக அக்டோபர் 6ஆம் தேதி எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள டெல்லியில் இருந்து சென்னை வரும் திட்டம் இருக்கிறது. எனது சுற்றுப்பயணம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அவர்களிடமும் தெரிவித்துள்ளேன். யார், யார் வருகிறார்கள் என்று சொல்லுங்கள் எனக் கேட்டிருக்கிறார்.
நிச்சயம் வருவதற்கான நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். எங்களின் தேர்தல் சுற்றுப்பயணம் பெரிய வெற்றி பெறும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தமிழக பாஜகவின் முன்னிருக்கும் இரண்டு சவால்கள் என்பது கூட்டணியை பலப்படுத்துவது, அதிமுகவிடம் கூடுதல் இடங்களை கேட்டு பெறுவது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நகர்வுகள் பெரிதும் முக்கியத்துவம் பெறும் என்கின்றனர்.