விண்ணில் சீறிப்பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி – எப்18..!

Estimated read time 1 min read

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் கம்பீரமாக விண்ணை நோக்கிப் பாய்ந்தது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன வழிகாட்டுதல் செயற்கைக்கோளான ‘என்.வி.எஸ் – 03’ செயற்கைக் கோளை சுமந்துகொண்டு, ஜி.எஸ்.எல்.வி – எப்18 ராக்கெட், இரவு 11.51 மணிக்கு, விண்ணில் வெற்றிகரமாகச் சீறிப்பாய்ந்தது.

ஆரம்பக் காலங்களில் பல்வேறு தொழில்நுட்ப சவால்களைச் சந்தித்த ஜி.எஸ்.எல்.வி., தொடர் வெற்றிகள் மூலம் தற்போது அபார வளர்ச்சி கண்டுள்ளது. சுமார் 50 மீட்டர் உயரமும், 420 டன் எடையும் கொண்ட இந்த ராக்கெட்டின் 20வது வரலாற்றுப் பயணம் இதுவாகும். இந்தியாவுக்கு ஏற்கனவே 3 வழிகாட்டி செயற்கைக்கோள்கள் உள்ள நிலையில், 4வது செயற்கைக்கோளாக என்.வி.எஸ் – 03 ஏவப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள்.

வழிகாட்டுதல் செயற்கைக்கோள்களின் துல்லியமான செயல்பாட்டிற்கு நேரம் மிக முக்கியமானது. முன்பு வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கடிகாரங்களில், பிரச்னைகள் ஏற்பட்ட நிலையில், இந்த செயற்கைக்கோளில் முற்றிலும் இந்தியாவிலேயே உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட உயர்தர ‘ரூபிடியம் அணுக்கடிகாரம்’ பொருத்தப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.அமெரிக்காவின் ஜி.பி.எஸ்., அமைப்பைச் சார்ந்திருக்காமல், இந்தியாவின் சொந்த வழிகாட்டுதல் கட்டமைப்பான நாவிக் அமைப்பை மேலும் வலுப்படுத்த இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி நமது எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 1,500 கி.மீ., சுற்றளவு வரை துல்லியமான வழிகாட்டுதல் தகவல்களை வழங்குவதே இதன் இலக்கு.

இந்த இரண்டாம் தலைமுறை என்.வி.எஸ்., வரிசை செயற்கைக்கோளில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ‘எல்1’ அலைவரிசை சிக்னல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எதிர்காலத்தில் செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் வாகன நேவிகேஷனில் ‘நேவிக்’ பயன்பாடு எளிதாகும். அதே சமயம் நாட்டின் பாதுகாப்புப் படையினரின் துல்லியமான கண்காணிப்புத் தேவைகளுக்கும் இது பெரும் பலமாக அமையும்.

Please follow and like us:

You May Also Like

More From Author