பரஸ்பர சம்மதத்துடன் தொடங்கப்பட்ட ஒரு காதல் தொடர்பு தோல்வியில் முடிவடையும் போது, அதனை உடனடியாகக் கற்பழிப்பு (பாலியல் வன்கொடுமை) வழக்காக மாற்ற முடியாது என்று உச்சநீதிமன்றம் மிக முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவருக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் ஏமாற்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு, அவரை அந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுவித்து இந்தத் தீர்ப்பை வழங்கியது.
ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு பொய் கூறி பெண்ணின் சம்மதத்தைப் பெறுவதற்கும், நன்றாகச் சென்று கொண்டிருந்த தொடர்பு பின்நாட்களில் கருத்து வேறுபாட்டால் முறிந்துபோவதற்கும் இடையே உள்ள சட்ட வேறுபாட்டை நீதிமன்றங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒரு தம்பதியினருக்கு இடையே பரஸ்பர விருப்பத்துடன் நடைபெற்ற பாலியல் உறவை, பின்னநாட்களில் அந்தத் தொடர்பு தோல்வியடைந்து விட்டது என்பதற்காக மட்டுமே கற்பழிப்பு குற்றமாகக் கருத முடியாது என்றும், தனது விருப்பப்படி ஒரு தொடர்பிலிருந்து வெளியேற எந்தவொரு நபருக்கும் முழு உரிமை உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அனைத்துத் தோல்வியடைந்த காதல் தொடர்புகளையும் பாலியல் குற்றங்களாக மாற்றுவது, உண்மையான கற்பழிப்பு குற்றங்களின் தீவிரத்தைக் குறைத்துவிடும் என்று எச்சரித்த நீதிமன்றம், தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்த முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது.
