நிலவில் அணு உலை அமைக்க அமெரிக்கா, சீனா, ரஷ்யா இடையே கடும் போட்டி…!

Estimated read time 1 min read

நிலவில் மனிதர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கும், அங்குள்ள இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதற்கும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் அணு உலைகளை அமைக்கத் தயாராகி வருகின்றன. எதிர்காலத்தில் நிலவில் நிரந்தர ஆய்வு மையங்களை உருவாக்கி, விஞ்ஞானிகள் நீண்ட காலம் தங்கிப் பணியாற்ற வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இதற்குத் தொடர்ந்து மின்சாரம் தேவைப்படுவதால், அணு உலைகள் முக்கியமான ஆற்றல் ஆதாரமாகக் கருதப்படுகின்றன. நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள ஆழமான பள்ளங்களில் நீர் பனிக்கட்டி வடிவில் இருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அந்தப் பனியிலிருந்து குடிநீர், சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜன், ராக்கெட் எரிபொருள் ஆகியவற்றைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அலுமினியம், டைட்டானியம், சிலிக்கான் போன்ற கனிமங்களையும் அங்கு வெட்டி எடுத்து செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட விண்வெளிப் பயன்பாடுகளுக்குப் பயன்படுத்த முடியும்.

நிலவில் சூரிய மின்சக்தியை மட்டும் நம்பி தொடர்ந்து மின்சாரம் தயாரிப்பது சவாலானது. ஏனெனில், நிலவின் சில பகுதிகளில் தொடர்ந்து சுமார் இரண்டு வாரங்கள் வரை சூரிய ஒளி கிடைக்காது. அந்தக் காலத்தில் சூரிய மின்தகடுகள் மின்சாரம் தயாரிக்க முடியாது; பேட்டரிகள் மூலம் மின்சாரம் வழங்குவதும் செலவு அதிகமானதாக இருக்கும். டீசல் போன்ற எரிபொருட்களை பூமியிலிருந்து நிலவுக்குக் கொண்டு செல்வதும் அதிகச் செலவை ஏற்படுத்தும். எனவே, சூரிய ஒளி இல்லாத நேரத்திலும் தொடர்ந்து மின்சாரம் வழங்கக்கூடிய அணு ஆற்றல் முக்கியத் தீர்வாகக் கருதப்படுகிறது. நிலவில் அமைக்கப்படும் ஆய்வு மையங்களையும் பனிக்கட்டி சுரங்கப் பணிகளையும் இயக்க மூன்று அல்லது நான்கு அணு உலைகள் தேவைப்படலாம் என பாங்கோர் பல்கலைக்கழகத்தின் அணுசக்தி எதிர்கால ஆய்வு நிறுவன இயக்குநர் சைமன் மிடில்பர்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ‘லூனார் ரியாக்டர்-1’ என்ற அணு உலையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. 2030ஆம் ஆண்டின் இறுதிக்குள் இதைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அணு உலை 20 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையிலும், பராமரிப்பு இல்லாமல் ஐந்து ஆண்டுகள் இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட உள்ளது. இதன் எடை 6,000 கிலோவுக்குக் குறைவாக இருக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மறுபுறம், ரஷ்யாவும் சீனாவும் இணைந்து ‘செலினா’ என்ற அணு உலையை உருவாக்கி வருகின்றன. இது 10 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறனுடன், பராமரிப்பு இல்லாமல் 10 ஆண்டுகள் இயங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 1,100 முதல் 1,300 கிலோ வரை எடை கொண்ட இந்த அணு உலையை, சீனாவின் தலைமையில் உருவாகும் நிலவு ஆய்வு மையத்துக்கு மின்சாரம் வழங்கும் வகையில் 2036ஆம் ஆண்டுக்குள் தயாரிக்க ரஷ்யா இலக்கு வைத்துள்ளது.

விண்வெளிக்கு அணு உலைகளை அனுப்புவது புதிய முயற்சி அல்ல. பனிப்போர் காலத்தில், 1960களின் இறுதி முதல் 1980கள் வரை சோவியத் ஒன்றியம் 30க்கும் மேற்பட்ட அணு உலைகளைப் பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது. அமெரிக்காவும் கடந்த 70 ஆண்டுகளில் விண்வெளி அணுசக்தித் திட்டங்களுக்காக சுமார் 20 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளது. நிலவுக்கு அனுப்பப்படும் அணு உலைகள் முதலில் பூமியில் தயாரிக்கப்பட்டு, ரோபோ விண்கலங்கள் மூலம் கொண்டு செல்லப்படும். நிலவில் பாதுகாப்பாகத் தரையிறங்கும் வரை அவை செயல்படாமல் வைக்கப்படும்; அதன் பிறகே இயக்கப்படும். இருப்பினும், அணு உலை செயல்பாட்டுக்கு வந்த பிறகு விபத்து ஏற்பட்டால் கதிரியக்கப் பொருட்கள் பரவும் அபாயம் உள்ளது. 1978ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் ‘காஸ்மோஸ்-954’ செயற்கைக்கோள் கனடாவில் விழுந்ததில் சுமார் 1.24 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பில் கதிரியக்கப் பொருட்கள் பரவின. 1967ஆம் ஆண்டின் வெளிவிண்வெளி ஒப்பந்தத்தின்படி எந்த நாடும் நிலவின் மீது உரிமை கோர முடியாது; ஆனால் தாங்கள் அனுப்பிய கருவிகளுக்கு அந்தந்த நாடுகளுக்கு உரிமை உண்டு. அமைதியான நோக்கங்களுக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதற்கும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாமல் செயல்படுவதற்கும் இந்த ஒப்பந்தம் அனுமதிக்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author