உலகின் முன்னணி நிறுவனங்களை வழிநடத்தும் இந்திய வம்சாவளி தலைவர்களின் பட்டியலில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை முதலிடத்தைப் பிடித்துள்ளார். 2026-ம் ஆண்டுக்கான HSBC ஹுருன் உலகளாவிய இந்தியர்கள் பட்டியலில் அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் கடந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இந்தப் பட்டியலில் சுந்தர் பிச்சை முதலிடத்தைப் பிடிக்க ஆல்பபெட் நிறுவனத்தின் மதிப்பு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. அந்த நிறுவனத்தின் மதிப்பு 2024-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 98 சதவீதம் அதிகரித்து 4.2 லட்சம் கோடி அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள சத்யா நாதெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மதிப்பு 2.6 லட்சம் கோடி டாலராக உள்ளது. மைக்ரான் நிறுவனத்தின் சஞ்சய் மெஹ்ரோத்ரா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் யூடியூப் தலைமைச் செயல் அதிகாரி நீல் மோகன் நான்காவது இடத்திலும், கூகுள் கிளவுட் தலைமைச் செயல் அதிகாரி தாமஸ் குரியன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். மொத்தம் 236 இந்திய வம்சாவளி தலைவர்கள், இந்தியாவுக்கு வெளியே தலைமையகத்தைக் கொண்ட 200 நிறுவனங்களை வழிநடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்களின் ஒட்டுமொத்த மதிப்பு 15 லட்சம் கோடி அமெரிக்க டாலராக உள்ளது. இது 2024-ம் ஆண்டை விட 53 சதவீதம் அதிகமாகும்.
இந்த நிறுவனங்கள் 2025-ம் ஆண்டில் சுமார் 2.5 லட்சம் கோடி டாலர் வருவாயையும், 4,160 கோடி டாலர் நிகர லாபத்தையும் ஈட்டியுள்ளன. மேலும், உலகம் முழுவதும் சுமார் 53 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகின்றன. இந்தப் பட்டியல் தலைவர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பின் அடிப்படையில் அல்ல; அவர்கள் வழிநடத்தும் நிறுவனங்களின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. உலகளவில் இந்திய வம்சாவளியினர் முக்கிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் உயர்ந்து வருவதை இந்தப் பட்டியல் எடுத்துக்காட்டுகிறது.
