ஈரான் போருக்குப் பிறகு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களைக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஒரு பிரம்மாண்டமான திட்டத்தைத் தயாரித்து வருகிறது. ஈரானைக் கட்டுப்படுத்தவும், காசா மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா இடையே உறவுகளை இயல்பாக்கவும் இந்த மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க அரசாங்கத்தின் மூத்த ஆலோசகர்களும் பல்வேறு உயர் அதிகாரிகளும் இணைந்து இந்தத் திட்டத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஈரானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளை ஒன்றிணைப்பதும், அப்பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதுமே இந்த ராஜதந்திர முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தில் ஈரானுக்கு எதிராகப் பிராந்திய நட்பு நாடுகளைத் திரட்டுவது, காசா மற்றும் லெபனான் மோதல்களைத் தணிப்பது, மேலும் இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது என மூன்று முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, ஆபிரகாம் உடன்படிக்கையை விரிவுபடுத்தி இஸ்ரேல் – சவுதி அரேபியா இடையிலான உறவைச் சீராக்குவது டிரம்பின் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், வரவிருக்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தேர்தல்கள் இந்தத் திட்டத்திற்குச் சில அரசியல் சவால்களை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், இஸ்ரேலியத் தேர்தல் முடிவுகளுக்காகவோ அல்லது அங்கு ஏற்படும் அரசியல் சூழல்களுக்காகவோ காத்திருக்காமல், டிரம்ப் தனது திட்டத்தை முன்னெடுத்துச் செல்வார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது பல்வேறு மூத்த ஆலோசகர்களின் பரிந்துரைகளுடன் இந்தத் திட்டம் ஆரம்பக் கட்ட விவாதத்தில் உள்ளது. முழுமையான வடிவம் பெற இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என்று கூறப்படும் நிலையில், டிரம்பின் இந்த அதிரடித் திட்டம் மத்திய கிழக்கின் போருக்குப் பிந்தைய அரசியல் வரைபடத்தையே முற்றிலும் மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
