உள்ளூர் நேரப்படி மே 9ஆம் நாள் பிற்பகல் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் புடாபெஸ்ட் நகரில் உள்ள தலைமையமைச்சர் மாளிகையில் ஹங்கேரி தலைமையமைச்சர் விக்டர் ஒர்பானுடன் நீண்ட பேச்சுவார்த்தையை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையின் போது புதிய காலத்திற்கேற்ப சீன-ஹங்கேரி உறவைப் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவாக உயர்த்தவுள்ளதாக இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக அறிவித்துள்ளனர்.
ஷிச்சின்பிங் கூறுகையில், சீன-ஹங்கேரி நெடுநோக்கு கூட்டாளியுறவு உயர் நிலையில் வளர்ந்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயான அரசியல் நம்பிக்கை ஒன்றுக்கொன்று ஆழமாகி வருகிறது. பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பு அதிக சாதனைகளைப் பெற்று, புதிய ரக சர்வதேச உறவை உருவாக்குவதற்கான முன்மாதிரியாக அமைந்துள்ளது. இவ்வாண்டு இரு நாட்டு தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 75ஆவது ஆண்டு நிறைவாகும். இந்நிலையில் இரு நாட்டுறவின் வளர்ச்சி, புதிய முக்கிய வாய்ப்பை வரவேற்றுள்ளது. இரு நாடுகளும் புதிய காலத்திற்கேற்ப சீன-ஹங்கேரி உறவைப் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவாக உருவாக்குவதை வாய்ப்பாகக் கொண்டு, இரு நாட்டு ஒத்துழைப்புக்கு புதிய வலிமைமிக்க ஆற்றலை வழங்கி, இரு நாட்டு மக்களுக்கு மேலும் அருமையான எதிர்காலத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
விக்டர் ஒர்பான் கூறுகையில், சீனாவுடனான பல தரப்பு தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, உலக அமைதி மற்றும் நிதானத்தைக் கூட்டாக பேணிக்காக்க ஹங்கேரி விரும்புவதாகத் தெரிவித்தார். மேலும், இவ்வாண்டின் பிற்பாதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடப்பு தலைமை வகிக்கும் நாடாக, ஐரோப்பிய-சீன உறவின் சீரான வளர்ச்சியையும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையேயான ஒத்துழைப்பையும் முன்னேற்றுவதற்கு ஆக்கப்பூர்வ முயற்சியை மேற்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்கு பின், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானம், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, அறிவியல் தொழில் நுட்பம், பண்பாடு, வேளாண்மை உள்ளிட்ட துறைகள் சார்ந்து பல இரு தரப்பு ஒத்துழைப்பு ஆவணங்கள் கையொப்பமிடப்பட்டு பரிமாறி கொள்ளப்பட்டன.
இதற்கு பின் இருநாட்டுத் தலைவர்களும் செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்தனர்.