பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோயிலின் 4 வாயில்கள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் சரண் மஜி மற்றும் அமைச்சர்கள் அங்கு தரிசனம் செய்தனர்.
ஒடிசாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 78 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து ஒடிசா முதல்வராக மோகன் சரண் மஜி நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பூரி ஜெகநாதர் கோயிலின் 4 வாயில்களும் திறக்கப்படும் என தேர்தலின் போது பாஜக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இது தேர்தல் பிரச்சாரத்தின் போது முக்கிய விவகாரமாக கருதப்பட்டது.
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஜெகநாதர் கோயிலின் 4 வாயில்களும் இன்று திறக்கப்படவுள்ளது. இதனிடையே இன்று பூரி ஜெகநாதர் கோயிலுக்கு சென்ற ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மஜி, சாமி தரிசனம் செய்தனர் இதேபோல் துணை முதல்வர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் தரிசனம் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மோகன் சரண் மஜி, ஜெகநாதர் கோயிலின் 4 வாயில்களை திறப்பது தொடர்பாக நேற்று அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
கோவிட் ஊரடங்கின் போது ஜெகநாதர் ஆலயத்தின் 4 கதவுகள் பூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது,