நெஞ்சில் விழுந்த நெருப்பு விதைகள்

Estimated read time 0 min read

Web team

IMG_20240717_170859_379.jpg

நெஞ்சில் விழுந்த நெருப்பு விதைகள்
நூல் ஆசிரியர் : கவிஞர் பி. முருகேசன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

சாந்தகுமாரி வெளியீடு, மதுரை. 174 பக்கங்கள்,

விலை : ரூ. 100.

*****

நூல் ஆசிரியர் கவிஞர் பி. முருகேசன் அவர்கள், மதுரை மணியம்மை பள்ளியில் நடைபெறும் தமிழறிஞர் இரா. இளங்குமரனார் உரைவீச்சு நிகழ்வுக்கு தவறாமல் வந்து விடுவார். வந்த நாளில் வழங்கினார் இந்நூல். இளங்குமரனார் தலைமையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே கவிதை பாடிய அனுபவம் உள்ளவர் நூல் ஆசிரியர் கவிஞர் பி. முருகேசன். ‘தினத்தந்தி’ நாளிதழில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். காந்திய சிந்தனையாளர் மட்டுமல்ல, காந்திய வழி நடப்பவர் என்றும் கதராடையே அணிபவர், பண்பாளர், இனியர்.

இந்நூல் கவிஞர் வைரமுத்து, உலகத் திருக்குறள் பேரவையின் தலைவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார், பொன்னம்பல அடிகளார், புலவர் தமிழமுதன் ஆகியோர் அழகான அணிந்துரை நல்கி உள்ளனர். அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிகவும் நேர்த்தியாக உள்ளது.

மரபுக்கவிதை படிப்பது என்பது குற்றால அருவியில் குளிப்பது போன்ற பேரின்பம். நூல் முழுவதும் மரபுக்கவிதை விருந்து வைத்துள்ளார். மனதைக் கவரும் வைர வரிகளும் அறச்சீற்றம் மிக்க நெருப்புக் கேள்விகளும் நூலில் உள்ளன. “நெஞ்சில் விழுந்த நெருப்பு விதைகள்” என்று நூலிற்கு பொருத்தமான தலைப்பிட்டமைக்கு முதல் பாராட்டு. மகாகவி பாரதியார் போல நெஞ்சு பொறுக்குதில்லையே என நாட்டுநடப்பு கண்டு கவிதை வடித்துள்ளார். காந்தியவாதி மனதிற்குள் இவ்வளவு அறச்சீற்றமா என வியந்து போனேன். ஆனால் தேவையான அறச்சீற்றம் தான். பாராட்டுகள்.

தன்னைப் பெற்ற அம்மா பற்றிய முதல் கவிதையிலே தனி முத்திரை பதித்துள்ளார்.

அம்மாவே தெய்வம்!

காணும் கடவுள் என்பேனா
காக்கும் கடவும் என்பேனா
பேணும் உயிர்தான் என்பேனா
வான மழை தான் என்பேனா
வாழ்வும் வளமும் என்பேனா
தானமும் தருமமும் என்பேனா
தாயே உன்னை என் சொல்வேன்?

உலகில் ஒப்பற்ற உறவு அம்மாவைப் பற்றி என்பேனா? என்பேனா? என்று சொல்லி அவர் பேனா (எழுதுகோல்) வடித்த கவிதை நன்று.

உலக அளவில் தமிழர்களுக்கு பெருமை தேடித் தருவது தமிழ்வணக்கம். தமிழர்களின் அடையாளம் வணக்கம். வணக்கம் பற்றி நீண்ட கவிதை எழுதி உள்ளார். பதச்சோறாக சில வரிகள் மட்டும்.

வணக்கம் !

அன்பை வளர்ப்பது வணக்கம் ; நல்ல
அறிவை வளர்ப்பது வணக்கம் ; புனிதப்
பண்பை வளர்ப்பது வணக்கம் ; தூய
பக்தியை வளர்ப்பது வணக்கம் ; என்றும்
இன்பம் தருவது வணக்கம் ; நல்ல
இதயம் வளர்க்கும் வணக்கம் ; உலக
உண்மை உணர்த்தும் வணக்கம் ; உயர்ந்த
எண்ணம் வளர்க்கும் வணக்கம் தானே!

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் போல தமிழ்ப்பற்றுடன் உணர்ச்சி மிக்க கவிதைகள் வடித்துள்ளார். கேள்விகள் கேட்டு தமிழைகளைச் சிந்திக்க வைத்துள்ளார். பாராட்டுக்கள்.

தமிழா ! தமிழில் ஒப்பமிட்டால்
விரல்கள் ஒடிந்தா போய்விடும்?

தமிழா ! தமிழிசை கேட்டால்
செவிகள் செவிடா ஆய்விடும்?

தமிழா ! தமிழில் பெயர் வைத்தால்
தலைமுறை அழிந்தா போய்விடும்?

தந்தையாரின் முன்னெழுத்தை
தமிழில் எழுதினால் இழிவோ(டா)?

நூல் ஆசிரியர் கவிஞர் பி. முருகேசன் அவர்களின் அறச்சீற்றம் நியாயமானதே. நூலகத்தில் வருகை புரிவோர் இடும் கையெழுத்தில் 90 சதவிகிதம் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. தமிழில் கையொப்பமிடும் ஒரு சிலரும் தந்தை முன்எழுத்தை ஆங்கிலத்தில் எழுதி இருமொழியில் கையொப்பம் இடுவது வேதனை, வெட்கம், இந்நிலை மாற வேண்டும்.

நட்பின் எல்லை விரியட்டும்!
ஆண்டு புதிதாய் பிறக்கட்டும் இந்த
அகிலமும் புதிதாய் மலரட்டும்
நீண்ட அமைதி நிலவட்டும் என்றும்
நீதியும் நேர்மையும் நிலைக்கட்டும்!

நூல் ஆசிரியர் காந்தியவாதி என்பதால் நீதியும் நேர்மையும் நிலைக்கட்டும் என்கிறார். நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் எதிர்மறையாகவே இருக்கின்றன. மாற வேண்டும். காந்தியவாதிகளின் ஆசை நிறைவேற வேண்டும்.

வாக்களிக்கப் பணம் தரும் அவலம் தமிழகத்தில் அரங்கேறி, இந்தியா மட்டுமல்ல் உலக அளவில் தமிழகத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளதை உணர்ந்து எழுதிய கவிதை நன்று.

ஊழலோ ஊழல்!

ஊரை அடிச்சு உலையில் போடும்
உன்னோட காசு எனக்கு எதற்கு?
யாரை அடிச்சு பறிச்ச காசோ?
வேரை விழுதை வெட்டிய காசோ?
தாரையும் தப்பும் அடிச்சு ஆடி
சங்கு ஊதிப் போகும் போது
சேர்ந்து வருமோ இந்தக்காசு!
என்று சொல்லிய நாடு இதுவோ?

பணம், பணம் என்று அலையும் அரசியல்வாதிகளுக்கு வாழ்வின் நிலையாமை தத்துவத்தை எடுத்தி இயம்பி புத்தி புகட்டி உள்ளார். திருந்தினால் நன்று.

அரசியலில் நேர்மை ஒழிந்து, வாய்மை அழிந்து, பொய் பிரட்டு பித்தலாட்டம் மலிந்து விட்டது. நாட்டு நடப்பு கண்டும் உள்ளம் கொதித்து பல கவிதைகள் வடித்துள்ளார். நூல் வாங்கிப் படித்துப் பாருங்கள். சில மட்டும் இங்கே மேற்கோள் காட்டுகின்றேன்.

காற்றில் பறந்த காகிதங்கள் !

கோபுர உச்சியை அடைந்தது போல
ஆற்றல் இல்லா அரசியல்வாதிகள்
அரசனாய் அமைச்சனாய் ஆகின்றான்
இரண்டு ஒழுக்கமும் இல்லாதவன்
இமாலயத் தலைவன் ஆகின்றான்
திரண்ட மக்கள் நடுவினிலே
நிகரில்லாத் தலைவன் ஆகின்றான் !

கவிதை வரிகளின் மூலம் விழிப்புணர்வு விதைத்து உள்ளார்.

நூல் ஆசிரியர் கவிஞர் பி. முருகேசன் அவர்கள் கடவுளை வணங்கிடும் காந்தியவாதி. ஆன்மிகவாதி. ஆனாலும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக கேள்விக்கணைகள் தொடுத்துள்ளார், பாராட்டுகள்.

பாவங்கள் செய்வதற்குப்
பகவானை பங்கு சேர்க்கும்
பக்தி என்ன பக்தியோ?

கொலை, களவு செய்துவிட்டு
கோயில் கட்டிக் கும்பிடும்
பக்தி என்ன பக்தியோ?

கள்ளத்தொழில் செய்வதற்குக்
காணிக்கை செலுத்துகின்ற
பக்தி என்ன பக்தியோ?

மதவெறியைத் தூண்டி நல்ல
மக்களை மாக்களாக்கும்
பக்தி என்ன பக்தியோ?

மூடநம்பிக்கை ஒழிந்து
முழு ஞானத் தெளிவோடு
பக்தி செய்யும் நாள் எதுவோ?

பக்தி என்ற பெயரால் நடக்கும் அவலங்களை நீண்ட கவிதையின் மூலம் கேள்விகள் கேட்டு சிந்திக்க வைத்துள்ளார். ‘மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம்’ என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக கவிதைகள் வடித்துள்ளார்.

காந்தியடிகள் சிலை, பல இடங்களில் பார்த்து இருக்கிறோம். அவரது தலை சற்று கவிழ்ந்து இருக்கும். அவற்றை உற்றுநோக்கி வடித்த கவிதை நன்று.

மகாத்மா காந்தி!

இந்தக் காந்தி தலை இன்று தாழ்ந்தே இருப்பதேன்?
நாம் நல்ல பிள்ளைகளாய் இல்லை அதனாலே?
தந்தையாம் அவர் தலை நிமிர்ந்திட நாமெல் லோரும்
நல் ஒழுக்கப் பிள்ளைகளாய மாறுவோம் இன்றே !

அயல்நாட்டில் பிறந்த போதும் இந்திய நாட்டில் வாழ்ந்து, தொழுநோயாளிகளிடம் அன்பு செலுத்தி உலகை விட்டு மறைந்தாலும் மக்கள் உள்ளங்களில், வாழும் அன்னை தெரசா பற்றிக கவிதை நன்று.

அன்னை தெரசா!

புண்பட்டுப் புரையோடிய மனிதர்களையே
புனிதர்களாய் புடம் போட்டவர் அன்னை தெரசா!
துன்புற்றோர் துயர் துடைக்கும் மனிதர்களையே
அன்பான ஏசு என்றார் அன்னை தெரசா!

ஓய்வுக்கு ஓய்வு தந்து ஓய்வின்றி வடித்த கவிதைகள் நன்று. நூல் ஆசிரியர் கவிஞர் பி. முருகேசன் அவர்களுக்கு பாராட்டுகள்.தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துகள்.

Please follow and like us:

You May Also Like

More From Author