சீன ஊடகக் குழுமம், எகிப்தின் லுக்ஸர் அருங்காட்சியகம் மற்றும் கைரோவில் உள்ள சீன பண்பாட்டு மையம் ஆகியவை கூட்டாக நடத்தும் லியாங் ட்சு நாகரிகம் பற்றிய லுக்ஸர் சிறப்பு கண்காட்சியின் துவக்க விழா லுக்ஸர் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பரப்புரை துறை துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியுங், எகிப்து லுக்ஸர் மாநிலத்தின் தலைவர் இமலா ஆகியோர் துவக்க விழாவில் கலந்து கொண்டு, பண்பாடு, சுற்றுலா மற்றும் ஊடகம் உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்பு பற்றி ஆழமாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இமலாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது ஷென் ஹாய்சியுங் கூறுகையில், லுக்ஸர் பண்டைய எகிப்தின் ஒளிவீசும் நாகரிகத்தின் சின்னமாகும். 2016ஆம் ஆண்டு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் எகிப்தில் அரசு முறை பயணம் மேற்கொண்ட போது, எகிப்து அரசுத் தலைவர் சிசியுடன் இணைந்து, லுக்ஸரில் இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு, இரு நாட்டுப் பண்பாட்டு பரிமாற்றத்தின் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்தார். இரு நாட்டு அரசுத் தலைவர்களின் நெடுநோக்கு வழிகாட்டலுடன், இரு நாட்டுறவு செழிப்பாக வளர்ந்து வருகிறது என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், லுக்ஸர் மாநில அரசுடன், நிகழ்ச்சிகளின் கூட்டு தயாரிப்பு, சுற்றுலா வளம் பரப்புரை, பண்பாட்டு மரபுச் செலவப் பாதுகாப்பு முதலிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்க சீன ஊடகக் குழுமம் விரும்புவதாக தெரிவித்தார்.
இமலா கூறுகையில், லுக்ஸர் சீனாவின் பல நகரங்களுடன் நீண்டகால நட்பார்ந்த ஒத்துழைப்பு மேற்கொண்டு வருகிறது. எதிர்காலத்தில் சீன ஊடகக் குழுமத்துடன் இணைந்து, ஊடகத்தின் செல்வாக்கு மூலம், லுக்ஸரின் இயற்கை காட்சிகள், வரலாற்று மரபுச் செல்வங்கள் மற்றும் நாகரிகம் ஆகியவற்றை மேலதிக சீனப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புவதாக தெரிவித்தார்.