டெல்லி பாரத் மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்ற சர்வதேச ஏஐ (AI) மாநாட்டில் நேற்று (பிப்.20) திடீரெனப் புகுந்த காங்கிரஸ் இளைஞர் அணியினர், பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கமிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினர். உயர் தொழில்நுட்ப மாநாட்டில் நடந்த இந்தத் திடீர் போராட்டத்தால் அங்கிருந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பாதுகாப்பு வளையத்தை மீறி நடந்த இந்தச் சம்பவம், தற்போது அரசியல் ரீதியாகப் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் (X) தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் உலகளாவிய வளர்ச்சியையும், பிரதமர் மோடியின் சிறப்பான நல்லாட்சியையும் எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் இதுபோன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக அவர் சாடியுள்ளார். “நாட்டு மக்களின் ஆதரவைப் பெற முடியாத காங்கிரஸ், இது போன்ற மலிவான அரசியல் வித்தைகளில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது; இது ஒருபோதும் மக்களிடம் எடுபடாது” என்று டிடிவி தினகரன் மிகத் தெளிவாகப் பதிவிட்டுள்ளார்.
