தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலம்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு இன்று பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
தமிழக அரசியல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் தமிழக வெற்றி கழகம் எனப் பலமுனைப் போட்டி நிலவினாலும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து களம் காண்கிறது. இந்த மாநாட்டிற்காக சுமார் 25 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்சித் தோரணங்கள் மற்றும் கொடிகள் கட்டப்பட்டு, 500க்கும் மேற்பட்ட தமிழ் ஆளுமைகளின் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குடும்பம் குடும்பமாகத் திரண்டுள்ள நிலையில், தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு கோலாகலமாகத் தொடங்குகிறது. மாநாட்டின் முக்கிய நிகழ்வாக மாலை ஆறு மணியளவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கொடியேற்றி வைத்து எழுச்சி உரையாற்றுகிறார்.
அப்போது வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள நூற்றயிரண்டு ஆண்கள் மற்றும் நூற்றயிரண்டு பெண்கள் என மொத்தம் இருநூற்று முப்பத்து நான்கு வேட்பாளர்களையும் அவர் அறிமுகம் செய்கிறார். இந்தத் தேர்தலில் சீமான் தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் எட்டு சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ள நாம் தமிழர் கட்சி, இந்த மாநாட்டின் மூலம் தமிழக அரசியலில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
