2023ஆம் ஆண்டு உலகக் காசநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பற்றிய தினத்தை முன்னிட்டு மார்ச் 22ஆம் நாள் உலகச் சுகாதார அமைப்பு நடத்திய பரப்புரை நிகழ்வில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவியும், காசநோய் மற்றும் எய்ட்ஸ் நோய்த் தடுப்புக்கான உலகச் சுகாதார அமைப்பின் நல்லெண்ணத் தூதருமான பேங் லீயுவான் அம்மையார் உரைநிகழ்த்தினார்.
சமீபத்திய ஆண்டுகளில், உலகச் சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச சமூகத்தின் கூட்டு முயற்சியுடன், உலகளாவிய காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. காசநோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கும் சீனா, இது தொடர்பான பணியை சீனாவில் இப்பணி ஆரோக்கிய சீனா எனும் செயல்திட்டத்தில் சேர்த்துள்ளது என்று அவர் தெரிவித்தார். மேலும், புதிய நோயறிதல் நுட்பம், சிகிச்சை மற்றும் மேலாண்மை வழிமுறைகள் மூலம், சீனாவில் காச நோயாளிகள் குணமடையும் விகிதம் தொடர்ந்து 90 சதவீதத்துக்கு மேல் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
இன்றும் பொது மக்களின் ஆரோக்கியத்தை கடுமையாகப் பாதிக்கும் காசநோய், உலகளாவிய பொது சுகாதாரப் பிரச்சினையாகவும் இருக்கிறது. இந்நிலையில், பல்வேறு தரப்புகள் தங்களது வாக்குறுதியை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தி, முதலீட்டை அதிகரித்து, பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு மேற்கொண்டு, அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.