கேரளா மாநிலத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக காட்டாற்று வெள்ளம் பல்வேறு இடங்களில் ஊருக்குள் புகுந்தது. இந்நிலையில் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, மேம்பாடி, மற்றும் முண்டக்கை ஆகிய இடங்களில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. மக்கள் வாழும் பகுதியில் வெள்ளம் புகுந்து நிலச்சரிவு ஏற்பட்டதால் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் மண்ணுக்குள் புதைந்துக் கிடந்தனர்.
இந்த நிலசரியில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் வயநாடுக்கு நேற்று சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
இதை தொடர்ந்து ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது என் தந்தை இறந்தபோது எந்த அளவுக்கு வருத்தப்பட்டேனோ அதேபோன்று இப்போதும் வருத்தமடைகிறேன். இது ஒரு தேசிய பேரிடர். எனவே ஒட்டுமொத்த மக்களும் சேர்ந்து வயநாடு மக்களுக்காக உதவ வேண்டும். மேலும் வயநாட்டில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் இது தொடர்பாக விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.