உள்ளூர் நேரப்படி ஜூலை 13ஆம் நாள் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் வெளிவிவகார ஆணைய அலுவலகத்தின் தலைவர் வாங் யீ ஜகார்த்தாவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனைச் சந்தித்துப் பேசினார்.
இப்போது வாங் யீ கூறுகையில், கடந்த மாதத்தில் பிளிங்கன் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது, ஆழந்த மற்றும் மனம் திறந்த தொடர்பின் மூலம், இரு தரப்புகள் ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளன. அவற்றில் பாலி தீவு நிகழ்ச்சி நிரலுக்குத் திரும்புவது மிக முக்கியமானது. இது, சீன-அமெரிக்க உறவை சீரான திசைக்கு எடுத்துச் செல்வதற்கான முக்கிய காலடியாகும். அடுத்த கட்டத்தில், நடைமுறை நடவடிக்கைகளின் மூலம் இரு நாட்டு உறவு சரியான பாதைக்குத் திரும்பச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
தைவான் பிரச்சினையில் சீனாவின் கடுமையான நிலைப்பாட்டை வாங் யீ விளக்கினார். சீனாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தன்னிச்சையாக தலையிடக்கூடாது எனக் குறிப்பிட்ட அவர், சீனாவின் இறையாண்மை சுதந்திரம் மற்றும் உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாட்டைச் சேதப்படுத்த கூடாது என்றும், சீனாவின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தை அடக்குவதை நிறுத்த வேண்டும் எனவும் கூறினார். அதோடு, சீனாவுக்கு எதிரான சட்டவிரோத மற்றும் நியாயமற்ற பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்றும் வாங் யீ கேட்டுக்கொண்டார்.