Web team
ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி
ஒழுக்கமாக வாழும் வாழ்க்கை தவம்
ஒழுக்கம் கெட்டு வாழும் வாழ்க்கை சவம்
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப் பண்பாட்டை
உலகிற்கு பறைசாற்றியது நமது தமிழகம்
கற்பை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம்
கற்பித்தான் முண்டாசுக்கவி பாரதி
ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக உயர்த்தினார்
உலகப் பொதுமறை படைத்த திருவள்ளுவர்
கல்விக்கு இரண்டாம் இடம் தந்தார்
ஒழுக்கத்திற்கு முதல் இடம் தந்தார் திருவள்ளுவர்
வெள்ளை காகிதத்தில் சிறு கரும்புள்ளி இருந்தால்
கரும்புள்ளி மட்டுமே கண்ணில் படும்
எத்துணை பெருமைகள், திறமைகள் இருந்தாலும்
ஒழுக்கம் இல்லை என்றால் மதிப்பதில்லை யாரும்
நல்ல பெயர் வாங்குவது மிகவும் கடினம்
கெட்ட பெயரை விரைவாக பெற்றுத்தரும் ஒழுக்கக்கேடு
கண்ணகியும் சீதையும் ஒழுக்கமுடன் வாழ்ந்ததால்
கணினியுகத்திலும் போற்றுகின்றோம் அவர்களை
மாதவியும் சூர்ப்பநகையும் ஒழுக்கம் தவறியதால்
மண்ணில் இன்றும் பழிக்கிறார்கள் அவர்களை
இராமன் ஒழுக்கமுடன் வாழ்ந்ததால் கடவுள் ஆனான்
இராவணன் ஒழுக்கம் தவறியதால் அரக்கன் ஆனான்
பறவைகள் கூட ஒழுக்கத்தோடு வாழும் போது
பகுத்தறி பெற்ற மனிதன் ஒழுக்கம் தவறலாமா?
விலங்குகள் கூட ஒழுக்கத்தோடு வாழும்போது
விவேகமான மனிதன் ஒழுக்கம் தவறலாமா?
தவறு செய்ய வாய்ப்பு வந்த போதும்
தவறு செய்யாமல் இருப்பவர்களே சிறந்தவர்கள்
ஆறறிவு பெற்ற மனிதனுக்கு இன்று
அவசியம் தேவை நல் ஒழுக்கம்
ஒழுக்கத்தோடு வாழ்பவனுக்குப் பெயர்தான் மனிதன்
ஒழுக்கம் தவறி வாழ்பவன் மனிதனா? சிந்தியுங்கள்
இனிய ஒழுக்கம் தவறி நடப்பன் பெயர்
இரண்டு கால் மிருகம் என்று உணர்
மனம் போன போக்கில் வாழ்வது வாழ்வன்று
மனத்தை கட்டுக்கோப்பில் வைத்து வாழ்வதே வாழ்வாகும்
கணவன் ஒழுக்கத்தோடு வாழ்ந்து வந்தால்தான்
மனைவியிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்கும் உரிமை உண்டு
கணவன் ஒழுக்கம் கெட்டு வாழ்ந்து கொண்டு
மனைவியிடம் மட்டும் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது மூடத்தனம்
ஒழுக்கம் என்து பண்பாடு மட்டும் அன்று
ஒழுக்கம் என்பது உயிர் சார்ந்தது இன்று
நூற்றாண்டுகள் கடந்த பின்னும் நிலைத்தார்
நம் காந்தியடிகள் காரணம் நல்ஒழுக்கம்
கர்மவீரர் காமராசர் பிரம்மச்சாரியாக வாழ்ந்தார்
கல்வி வள்ளல் ஒழுக்கச்சீலராக வாழ்ந்தார்.
ஒருவருக்கு எல்லாம் இருந்தும் உயர்ந்த
ஒழுக்கம் இல்லை என்றால் பயனில்லை
ஒழுக்கம் இருந்து ஏழையாக இருந்தாலும்
உயர்ந்த புகழ் தேடி வந்து சேரும்
எய்ட்ஸ் நோய் கொடிய நோய் உயிர்க்கொல்லி நோய்
ஒருவனுக்கு ஒருத்தி உணர்த்தவந்த உன்னதநோய்
தமிழ்ப்பண்பாட்டை கடைபிடித்து நடந்தால்
தரணியில் எய்ட்ஸை இல்லாமல் ஒழித்திடலாம்
ஒழுக்கம் இல்லாததால் தான் இன்று
உலகம் முழுவதும் பல்கிப் பெருகியது எய்ட்ஸ்
ஒழுக்கம் இல்லாததால் தான் இன்று
மேலை நாடுகளில் வன்முறை வளர்ந்தது
மேலை நாட்டு நாகரீகத்தைக் கடைபிடித்ததால் தான்
நம் நாட்டில் பண்பாடு சிதைந்தது
உலகிற்கே விளக்காகத் திகழ்வது நம்நாடு
பண்பாட்டுச் சீரழிவால் சிதைகின்றது நம்நாடு
அந்நியரிடமுள்ள நல்ல பழக்கம் கடை பிடிப்போம்
அந்நியரிடமுள்ள கெட்ட பழக்கம் விட்டொழிப்போம்
உயிர் மேல் ஆசை இருந்தால்
ஒழுக்கத்தோடு வாழ்வது நல்லது
நீண்ட ஆயுள் வேண்டும் என்றால்
நல்ஒழுக்கம் நாளும் வேண்டும்
உடல்நலனுக்கு ஒழுக்கம் அவசியம்
உள்ளம் நலனுக்கு உடல் நலம் அவசியம்
நல்லவர்களைப் பாடமாகக் கொள்ளுங்கள்
கெட்டவர்களை கவனிக்காமல் விட்டுவிடுங்கள்
ஒழுக்கம் என்பது பால் போன்றது
ஒழுக்கக்கேடு என்பது விசம் போன்றது
ஒருகுடம் பாலில் ஒரு துளி விசம் கலந்தாலும் விசம்
ஒழுக்கமாக வாழ்க்கையில் ஒருநிமிடம் சபலப்பட்டாலும் சஞ்சலம்
இப்படித்தான் வாழவேண்டுமென்பது ஒழுக்கம்
எப்படியும் வாழலாம் என்பது மூடப்பழக்கம்
பகுத்தறிவைப் பயன்படுத்தி வாழ்வது மனித இனம்
பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் வாழ்வது விலங்கினம்
விலங்கை விலங்காக இருக்க வலியுறுத்துவதில்லை
மனிதனை மனிதனாக இருக்க வலியுறுத்துவது ஒழுக்கம்
உலகமே வியக்கும் உயர்ந்த நம்பண்பாடு
ஒழுக்கத்தை போற்றிப் பாதுகாப்பது கண்கூடு
எதை இழந்தாலும் திரும்ப பெற்றுவிடலாம்
ஒழுக்கத்தை இழந்தால் எல்லாம் போய்விடும்
நல்லவர் என்ற பெயரை பெற்றுத்தருவது
நாடு போற்றும் நல்ஒழுக்கம் ஆகும்
கோடிப்பணம் கொட்டிக்கிடந்தாலும்
ஒழுக்கம் இல்லை என்றால் ஏழைதான் அவன்
பணம் எதுவுமின்றி ஏழையாக இருந்தாலும்
ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் அவன் குபேரன்தான்
பண்புகளில் சிறந்த பண்பு ஒழுக்கம்
பண்பாட்டைப் பறை சாற்றுவது உயர்ந்த ஒழுக்கம்
வாழ்க்கைத்துறை தேடி அலையத்தேவை இல்லை
வாழ்க்கைத்துணை தேடிவரும் ஒழுக்கத்தோடு இருந்தால்
தனி மனித ஒழுக்கம் சமுதாய ஒழுக்கமாகும்
சமுதாய ஒழுக்கம் நாட்டின் ஒழுக்கமாகும்
மனம் ஒரு குரங்கு என்றார்கள் நம்
மனத்தை கட்டுப்படுத்தக் கற்க வேண்டும்
முயன்றால் முடியாதது உலகில் எதுவுமில்லை
முடிந்தளவு ஒழுக்கத்தோடு வாழ்ந்து காட்டுவோம்
ஒழுக்கமாக வாழும் வாழ்க்கை தவம்
ஒழுக்கம் கெட்டு வாழும் வாழ்க்கை சவம்